ஒரே நாளில் 12 பேருக்கு கொரோனா தொற்று

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2022-07-03 19:21 GMT

12 பேருக்கு தொற்று

தமிழகத்தில் கொரோனா 2-வது அலைக்கு பின் தொற்று படிப்படியாக குறைந்தது. 3-வது அலை உருவாகாமல் தடுக்கப்பட்டது. தொற்று பாதிப்பு குறைந்ததால் கட்டுப்பாடுகள் தளர்வு அளிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில் கொரோனா தொற்று படிப்படியாக சற்று அதிகரிக்க தொடங்கி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் தொற்று பாதிப்பு மிகவும் குறைந்திருந்த நிலையில் ஓரிருவர் மட்டும் சிகிச்சையில் இருந்து வந்தனர். இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் புதிதாக 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் கொரோனாவுக்கு தற்போது 38 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா சிகிச்சையில் நேற்று 2 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

தடுப்பு நடவடிக்கை

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரிக்க தொடங்கி உள்ள நிலையில் பொதுமக்கள் கவனமாக இருக்க அவ்வப்போது அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முழுமையாக கடைப்பிடிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர தடுப்பூசியும் மிக முக்கிய காரணமாகும். முதல் தவணை, 2-வது தவணை தடுப்பூசி பெரும்பாலானோர் செலுத்தினர். மேலும் பூஸ்டர் தடுப்பூசியும் போடப்படுகிறது. இந்த நிலையில் நோய் பரவலை தடுக்க அவ்வப்போது ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு தடுப்பூசி முகாம் சுகாதாரத்துறையினரால் நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் புதுக்கோட்டையில் கடந்த 3 வாரங்களுக்கு மேலாக கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறவில்லை. இதனால் சிறப்பு முகாமை சுகாதாரத்துறை கைவிட்டதா? என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். தற்போது தொற்று பரவல் அதிகரித்து வருகிற நிலையில் இதுவரை முதல் தவணை, 2-வது தவணை, பூஸ்டர் தடுப்பூசி செலுத்தாதவர்கள் செலுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்தி சிறப்பு முகாம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கிடையில் ஆங்காங்கே தனி மையம் அமைத்து தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதாகவும், அந்த மையங்களை பொதுமக்கள் அணுகி தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் எனவும் சுகாதாரத்துறை வட்டாரத்தில் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்