குமரி மீனவர்கள் உள்பட 12 பேரை மீட்க வேண்டும்

மாலத்தீவில் விசாரணை கைதிகளாக உள்ள குமரி மாவட்ட மீனவர்கள் உள்பட 12 பேரை மீட்க வேண்டும் என மீனவர்களின் குடும்பத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Update: 2023-09-13 21:37 GMT

நாகர்கோவில்:

மாலத்தீவில் விசாரணை கைதிகளாக உள்ள குமரி மாவட்ட மீனவர்கள் உள்பட 12 பேரை மீட்க வேண்டும் என மீனவர்களின் குடும்பத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

கப்பல் மோதியது

மாலத்தீவில் விசாரணை கைதிகளாக உள்ள குமரி மீனவர்களின் குடும்பத்தினர் மற்றும் தெற்காசிய மீனவர் தோழமை பொதுச்செயலாளர் சர்ச்சில் தலைமையில் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

தூத்தூர் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் பைஜூ. இவரது விசைப்படைகில் இரவிபுத்தன்துறையை சேர்ந்த ஷெரின் ஆன்ட்ரோ, ஷெல்டன், சூசை ரிஜிஸ்ட்டன், தேஜாஸ், சூசன், தூத்தூரை சேர்ந்த ஜோஸ், பூத்துறையை சேர்ந்த சுரேஷ், கேரள மாநிலம் விழிஞ்ஞத்தை சேர்ந்த ஆன்டனி ராஜூ, புதுச்சேரியை சேர்ந்த ஆனந்த், ரமேஷ் மற்றும் அசாம் மாநிலத்தை சேர்ந்த பிமல் பிசு, அபிஜித் ஆகிய 12 மீனவர்கள் கடந்த மாதம் 7-ந் தேதி ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

பின்னர் மீன் பிடித்துவிட்டு தேங்காப்பட்டணம் துறைமுகத்திற்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவு நோக்கி சென்ற இழுவை கப்பல் ஒன்று விசைப்படகு மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. கப்பல் மோதியதில் விசைப்படகு உடைந்து கடலில் மூழ்கியது. படகில் இருந்த 12 மீனவர்களும் கடலில் தத்தளித்தபடி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இதைத் தொடர்ந்து மாலத்தீவு கடற்படையினர் மீனவர்களை மீட்டு மாலத்தீவுக்கு கொண்டு சென்றனர். அங்கு விசாரணை கைதிகளாக மீனவர்கள் உள்ளனர்.

மீட்க வேண்டும்

எனவே விசாரணை கைதிகளாக உள்ள 12 மீனவர்களையும் உடனே மீட்க வேண்டும். விபத்தை ஏற்படுத்திய இழுவை கப்பல் மீது சட்ட நடவடிக்கை எடுத்து நிவாரணம் பெற்று தர வேண்டும். மேலும் ஆழ்கடலில் மீனவர்கள் மீது கவனக்குறைவாகவும், அஜாக்கிரதையாகவும் கப்பலை செலுத்தி விபத்தை ஏற்படுத்தும் கப்பல்கள் மீது மத்திய அரசு முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்