விவசாயி வீட்டில் ரூ.12 லட்சம் நகை கொள்ளை

மூங்கில்துறைப்பட்டு அருகே விவசாயி வீட்டில் ரூ.12 லட்சம் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2023-07-26 20:17 GMT

மூங்கில்துறைப்பட்டு, 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள ஈருடையாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் அந்தோணி. விவசாயி. இவரது மனைவி எலிசபெத்ராணி (வயது 57). இவரது மகன் ஆக்னல் (30). மும்பையில் தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், ஒரு பெண்ணுக்கும் நிச்சயிக்கப்பட்டு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது.

இதற்காக அந்தோணி குடும்பத்தினர் வீட்டில் புதிதாக நகைகள் வாங்கி வைத்திருந்தனர். இந்த நிலையில் அந்தோணி வீட்டை பூட்டிவிட்டு தனது மனைவியுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு மகன் ஆக்னலை பார்ப்பதற்காக மும்பை சென்றனர். நேற்று அவர்கள் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து அவர்கள் வீட்டுக்குள் சென்றுபார்த்தபோது, அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த துணிகள் அனைத்தும் சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 30 பவுன் நகை மற்றும் ரூ.6500 ரொக்கம் ஆகியவற்றை காணவில்லை. அதனை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. இது குறித்த தகவலின் பேரில் மூங்கில்துறைப்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

மர்மநபர்களுக்கு வலைவீச்சு

இதில் அந்தோணி வீட்டை பூட்டிவிட்டு சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள், அவரது வீட்டுக்குள் புகுந்து ரூ.12 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. தொடர்ந்து கைரேகை நிபுணரான சப்-இன்ஸ்பெக்டர் ராஜவேல் வரவழைக்கப்பட்டு கொள்ளை நடந்த வீட்டில் கைரேகை மற்றும் தடயங்கள் சேகரிக்கப்பட்டன. தொடர்ந்து இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்