ராமேஸ்வரத்தில் கடலில் வீசப்பட்ட 12 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்
ராமேஸ்வரத்தில் கடலில் வீசப்பட்ட 12 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம்,
தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதியானது, இலங்கைக்கு மிக அருகே உள்ளது. இலங்கையில் இருந்து தனுஷ்கோடி, ராமேசுவரத்துக்கு அகதிகளாக மக்கள் அவ்வப்போது வருகிறார்கள். அதே நேரத்தில் ராமநாதபுரம் கடல் பகுதி வழியாக இலங்கைக்கும், இலங்கையில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்துக்கும் கடல் வழி கடத்தல் சம்பவங்கள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில், தனுஷ்கோடி கடல் பகுதி வழியாக மண்டபத்துக்கு படகில் தங்கக்கட்டிகள் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவுக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. அதை தொடர்ந்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் மற்றும் மண்டபம் இந்திய கடலோர காவல் படையினர் இணைந்து நேற்று முன்தினம் நள்ளிரவில் மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு ரோந்து கப்பலில் விரைந்து சென்றனர்.
இந்திய கடலோர காவல் படை கப்பலை கண்டதும், படகு ஒன்றில் இருந்தவர்கள், திடீரென சில பொருட்களை கடலில் தூக்கி வீசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து கடலோர காவல் படையினர் விரைந்து சென்று அந்த படகை மடக்கி பிடித்தனர். அதில் இருந்த 3 பேரையும் பிடித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது, அவர்கள் இலங்கையில் இருந்து படகில் கடத்தி வந்த பொருளைத்தான் கடலில் வீசியது தெரியவந்தது. அவை தங்கக்கட்டிகளாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இதைதொடர்ந்து இந்திய கடலோர காவல் படையின் ஸ்க்யூபா டைவிங் (கடல் மூழ்கு நீச்சல்) பயிற்சி பெற்ற வீரர்கள் மூலம் கடலில் வீசப்பட்ட அந்த பொருட்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். அந்த பொருட்கள் கைப்பற்றிய பின்னரே அவை தங்கக்கட்டிகளா? அல்லது வேறு ஏதேனும் பொருட்களா? என்பது குறித்து தெரியவரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், ராமேஸ்வரத்தில் கடலில் வீசப்பட்ட 12 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நடுக்கடலில் தூக்கி வீசப்பட்ட கடத்தல் தங்கத்தை இந்திய கடற்படையினர் மீட்டனர். மீட்கப்பட்ட கடத்தல் தங்கத்தின் சர்வதேச மதிப்பு ரூ.7.5 கோடி என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த தங்கம் எங்கிருந்து கொண்டுவரப்பட்டது? இதற்கு பின்னனியில் யார்? யார்? உள்ளனர் என அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.