புளியமரத்தில் அரசு பஸ் மோதி 12 பயணிகள் காயம்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே புளியமரத்தில் அரசு பஸ் மோதி 12 பயணிகள் காயம் அடைந்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர், ஜூன்.15-
மதுரையில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சை விருதுநகரை சேர்ந்த முனியசாமி ஓட்டினார். பூவாணி அருகே சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரம் உள்ள புளியமரத்தில் மோதியது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த காமாட்சி, முத்தையா, பவானி உள்பட 12 பயணிகள் காயம் அடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் 4 பேர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து பஸ் டிரைவர் முனியசாமி மீது ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.