மாவட்ட தொழில் மையம் மூலம் மானியத்துடன் ரூ.12½ கோடி கடனுதவி

ராமநாதபுரம் மாவட்ட தொழில் மையம் மூலம் பல்வேறு திட்டங்களின் கீழ் மானியத்துடன் ரூ.12.60 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்தார்.

Update: 2023-05-26 18:45 GMT

ராமநாதபுரம் மாவட்ட தொழில் மையம் மூலம் பல்வேறு திட்டங்களின் கீழ் மானியத்துடன் ரூ.12.60 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்தார்.

தொழில் முனைவோர்

தமிழக அரசு படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் தொழில் தொடங்கி, தொழில் முனைவோராக உருவாகும் வகையில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி தொழில் வணிக துறையின் கீழ் செயல்படும் மாவட்ட தொழில் மையத்தின் மூலம் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் சுயதொழில் தொடங்கிட, புதிய தொழில் முனைவோர்களை உருவாக்கிட அவர்களுக்கு தொழில் மேம்பாட்டு பயிற்சி மற்றும் மானியத்துடன் கூடிய கடனுதவி அளிக்கப்படுகிறது.

புதிய தொழில் முனைவோர் மற்றும் 10,12-ம் வகுப்பு படித்த தொழிற்கல்வி தேர்ச்சி பெற்ற வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை 25 சதவீத மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வியாபாரம், சேவை தொழில்கள் மற்றும் உற்பத்தி தொழில்கள் தொடங்கிட ரூ.5 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை 25 சதவீத மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது.

கடனுதவி

அதன்படி ராமநாதபுரம் மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் கடந்த ஒரு மாதத்தில் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் 8 இளைஞர்களுக்கு ரூ.3.93 கோடி கடனுதவி ரூ.1.19 கோடி மானியத்துடன் வழங்கப்பட்டது. பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் 6 இளைஞர்களுக்கு ரூ.1.11 கோடி கடனுதவி ரூ.34 லட்சம் மானியத்துடன் வழங்கப்பட்டது.

திருவாடானை சட்டமன்ற தொகுதியில் 6 இளைஞர்களுக்கு ரூ.2.27 கோடி கடனுதவி ரூ.50.89 லட்சம் மானியத்துடன் வழங்கப்பட்டது. முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியில் 7 இளைஞர்களுக்கு ரூ.1.60 கோடி கடனுதவி ரூ.57 லட்சம் மானியத்துடன் வழங்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் மொத்தம் 27 இளைஞர்களுக்கு ரூ.8.91 கோடி கடனுதவி ரூ.2.61 கோடி மானியத்துடன் வழங்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் 59 இளைஞர்களுக்கு ரூ.2.21 கோடி கடனுதவி ரூ.55 லட்சம் மானியம், பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் 18 இளைஞர்களுக்கு ரூ.73.12 லட்சம் கடனுதவி ரூ.18.28 லட்சம் மானியம், திருவாடனை சட்டமன்ற தொகுதியில் 11 இளைஞர்களுக்கு ரூ.42 லட்சம் கடனுதவி ரூ.10 லட்சம் மானியம், முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியில் 9 இளைஞர்களுக்கு ரூ.32 லட்சம் கடனுதவி ரூ.8 லட்சம் மானியம் என மொத்தம் 97 இளைஞர்களுக்கு ரூ.3.68 கோடி கடனுதவி ரூ.92 லட்சம் மானிய தொகை வழங்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்