ஏ.ஐ.டி.யு.சி.தொழிற்சங்கத்தினர் 118 பேர் கைது
ஏ.ஐ.டி.யு.சி.தொழிற்சங்கத்தினர் 118 பேர் கைது செய்யப்பட்டனர்.
மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து நாடு முழுவதும் ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவித்து இருந்தனர். அதன்படி திருச்சி மத்திய பஸ் நிலையம் பெரியார்சிலை அருகே திரண்ட ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக ஜங்ஷன் ரெயில் நிலையம் நோக்கி மறியல் ஈடுபடுவதற்காக புறப்பட்டனர்.
சங்க தேசிய செயலாளர் வகிதா நிஜாம் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் சுரேஷ் முன்னிலை வகித்தார். ஊர்வலமாக சென்றவர்களை பாதிதூரத்திலேயே போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். உடனே அவர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 40 பெண்கள் உள்பட 118 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர். இந்த போராட்டத்தில் 240 நாட்கள் பணிபுரிந்தால் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். எந்த தொழில் பணிபுரிந்தாலும் மாத சம்பளம் ரூ.21 ஆயிரம் வழங்க வேண்டும். இ.பி.எஸ்.-95 மற்றும் நலவாரியங்களில் குறைந்தபட்ச ஓய்வூதியம் மாதம் ரூ.6 ஆயிரம் வழங்க வேண்டும். நலவாரிய பதிவுகளை எளிமைப்படுத்தி நிதி பயன்கள் உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.