விவசாயி வீட்டில் 110 பவுன் நகை, 4 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை

சங்கராபுரம் அருகே விவசாயி வீட்டில் 110 நகைகள், 4 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்

Update: 2022-12-30 18:45 GMT

மூங்கில்துறைப்பட்டு

சென்னை சென்றனர்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள புதுப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் சின்ராசு (வயது 63), விவசாயி. இவருடைய மனைவி சித்ரா(53). பரசுராமன், கிருஷ்ணராஜ் என்ற 2 மகன்கள் உள்ளனர். மகன்கள் இருவரும் சென்னையில் தங்கி, அங்குள்ள தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கணவன்-மனைவி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு, மகன்களை பார்க்க சென்னை சென்றனர். பின்னர் அவர்கள் நேற்று மதியம் மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பினர்.

போலீசார் விசாரணை

அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த இருவரும் உள்ளே சென்று பார்த்தனர். அங்கு, பீரோ திறந்த நிலையில் துணிமணிகள் அனைத்தும் சிதறிகிடந்தன. மேலும் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 110 பவுன் நகைகள், 4 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.1½ லட்சம் ரொக்கத்தை காணவில்லை. இதனால் பதறிய சின்ராசு இதுபற்றி வடபொன்பரப்பி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி, இன்ஸ்பெக்டர் பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

ரூ.43 லட்சம் நகை, பணம் கொள்ளை

விசாரணையில், கணவன்-மனைவி வெளியூர் சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து ரூ.43 லட்சம் மதிப்புள்ள நகை, பணம், வெள்ளி பொருட்களை கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது.

மேலும் கொள்ளை நடந்த வீட்டில் பதிவாகி இருந்த மர்மநபர்களின் கைரேகைகள் சேகரிக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதோடு, நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அக்கிராம மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்