11 வருட காதல் கைகூடியது: இந்தோனேசிய பெண்ணை கரம்பிடித்த குமரி வாலிபர்

11 வருடமாக காதலித்த இந்தோனேசிய பெண்ணை குமரி வாலிபர் கரம் பிடித்தார்.

Update: 2022-06-27 15:33 GMT

நாகர்கோவில், ஜூன்.28-

11 வருடமாக காதலித்த இந்தோனேசிய பெண்ணை குமரி வாலிபர் கரம் பிடித்தார்.

குமரி வாலிபர்

கன்னியாகுமரி ராஜசங்கீத தெருவை சேர்ந்தவர் எழில் குமார் (வயது 33). ஓட்டல் மேனேஜ்மென்ட் முடித்த இவர் துபாயில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் பணியாற்றி வருகிறார். அதே ஓட்டலில் இந்தோனேசியாவை சேர்ந்த ரினாவதி ராஸ்மன் (31) என்பவரும் பணிபுரிந்தார்.

ஒரே ஓட்டலில் பணிபுரிந்ததால் எழில்குமாருக்கும், ரினாவதி ராஸ்மனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் நெருக்கத்தை ஏற்படுத்தி காதலாக மாறியது.

வெளிநாட்டு பெண்ணை கரம் பிடித்தார்

வருடங்கள் பல கடந்தும் தங்களுடைய காதலில் இருவரும் உறுதியாக இருந்தனர். கடல் கடந்த இந்த காதலை இருவருடைய பெற்றோரும் ஏற்றுக் கொண்டனர். பின்னர் திருமணத்துக்கான ஏற்பாடுகளும் தடபுடலாக நடந்தது. 11 வருட காதல், திருமணத்தில் கைகூட போகிறது என்ற உற்சாகத்தில் ஜோடி இருந்தது.

அதே சமயத்தில் திருமணத்தை கன்னியாகுமரியில் நடத்த எழில்குமார் விரும்பினார். இதற்கு ரினாவதி ராஸ்மனும் சம்மதம் தெரிவித்தார். அதன்படி கத்தோலிக்க கிறிஸ்தவ முறைப்படி கன்னியாகுமரியில் உள்ள தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தில் நேற்று காலை திருமணம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

காதல் அனுபவம்

கடல் கடந்த காதல் அனுபவம் குறித்து எழில்குமார் கூறுகையில்," என்னுடைய தந்தை அமலன்-தாய் தமிழ்ச்செல்வி. எனக்கு 2 அக்காள் மற்றும் ஒரு தம்பி உள்ளனர். மீனவ சமுதாயத்தை சேர்ந்த நான் படிப்பை முடித்ததும் கடந்த 12 வருடங்களுக்கு முன்பு துபாயில் உள்ள ஒரு ஓட்டலில் மேலாளராக பணியில் சேர்ந்தேன்.

அப்போது அங்கு பணிபுரிந்த இந்தோனேசியாவை சேர்ந்த ரினாவதி ராஸ்மனுவை காதலித்தேன். பின்னர் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டோம்" என்றார்.

மணமகள் ரீனாவதி ராஸ்மன் கூறுகையில், "இந்தோனேசியா நாட்டை சேர்ந்த நான் சிறுவயதாக இருந்த போதே எனது தந்தை இறந்து விட்டார். எனக்கு ஒரு அண்ணன், ஒரு அக்காள், ஒரு தங்கை உள்ளனர். தாயார் மினார் மார்பன் பராமரிப்பில் வாழ்ந்து வந்தேன். எழில்குமாரின் பழகும்விதம் எனக்கு பிடித்திருந்தது. இதனால் அவரை காதலித்தேன். 11 வருட காதலை குடும்பத்தினர் ஏற்று கொண்டதால் தற்போது திருமணம் செய்து கொண்டோம். என்னுடைய திருமணத்திற்கு தாய் மற்றும் உறவினர்கள் சிலர் வந்திருந்தனர்" என்றார்.

---

Tags:    

மேலும் செய்திகள்