டிரைவர் இல்லாமல் பஸ் ஓடியதால் 11 தொழிலாளர்கள் படுகாயம்
பேரணாம்பட்டு அருகே 100 நாள் திட்ட பணியாளர்களை ஏற்றாமல் சென்றதால் ஏற்பட்ட தகராறு காரணமாக தானாக பஸ் ஓடியதில் 11 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர்.
தொழிலாளர்களை ஏற்றவில்லை
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் இருந்து எருக்கம்பட்டு, கோட்டையூர் கிராமங்களுக்கு தினமும் காலை 7.45 மணி, மாலை 5 மணி, இரவு 7.30 மணி ஆகிய 3 வேளைகளில் பள்ளி மாணவர்களுக்காக அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று காலை 7.45 மணியளவில் பேரணாம்பட்டில் இருந்து புறப்பட்டு சென்ற அரசு பஸ் எருக்கம்பட்டு - கோட்டையூர் கிராமங்களுக்கு இடையில் சென்று கொண்டிருந்தது.
அப்போது 100 நாள் பணியாளர்கள் 20-க்கும் மேற்பட்டவர்கள் கோட்டையூர் கிராமத்தில் நடைபெறும் பணிக்கு செல்வதற்காக பஸ்சில் ஏறினர். மீதமுள்ள பணியாளர்கள் பஸ்சில் ஏறுவதற்குள் டிரைவர் சிவக்குமார் பஸ்சை இயக்கியதாக கூறப்படுகிறது.
தானாக ஓடிய பஸ்
அப்போது பஸ்சில் இருந்த 100 நாள் வேலை பணியாளர்கள் பாதி பேரை ஏன் பஸ்சில் ஏற்றவில்லை என்று கேட்டு, பஸ்சை நிறுத்தும்படி கூச்சலிட்டனர். அதற்கு பஸ் டிரைவர் தான் பள்ளி மாணவர்களை ஏற்றிக் கொண்டு பேரணாம்பட்டில் இறக்கி விட்டு, சென்னைக்கு பஸ்சை இயக்க வேண்டும். நேரமாகி விட்டது எனக் கூறியுள்ளார்.
இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த பஸ் டிரைவர் சிவக்குமார் பஸ்சை திடீரென பிரேக் போட்டு, இருக்கையிலிருந்து சென்று மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது பஸ் குறுகலான பாதையில் தானாக நகர்ந்து சென்றுள்ளது.
11 தொழிலாளர்கள் காயம்
இதில் பஸ்சின் பின்பக்க இருக்கையில் இருந்த சந்திரா (வயது 65) என்பவர் தூக்கி எறியப்பட்டு ரோட்டில் விழுந்து படுகாயமடைந்தார். மேலும் பஸ்சில் இருந்த 100 நாள் தொழிலாளர்கள் பழனி, விமலா, சந்திரம்மாள், ராேஜஸ்வரி, சகுந்தலா, வனஜா, ஜோதி, உமா, கண்ணம்மா, நாகம்மாள் ஆகிய 10 பேர் பஸ்சிற்குள் சீட்டுகளுக்கு நடுவில் விழுந்தனர். அவர்களுக்கும் காயம் ஏற்பட்டது. உடனடியாக பஸ்சை நிறுத்தி அனைவரும் பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். சந்திரா மட்டும் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது சம்பந்தமாக பேரணாம்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.