கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 11 டன் ரேஷன் அரிசி பறிமுதல் - 2 பேர் கைது
கோவையில் இருந்து கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 11 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேரை கைது செய்ததுடன், 2 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
கோவை:
கோவை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கோவை அருகே உள்ள எல் அண்டு டி பைபாஸ் சாலையில் உள்ள செங்கோதிபாளையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரி, மினி டெம்போ ஆகியவற்றை தடுத்து நிறுத்தி அதற்குள் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினார்கள்.
அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணான பதிலை தெரிவித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வாகனங்களில் ஏற்றப்பட்டு இருந்த மூட்டைகளை பிரித்து சோதனை செய்தனர். அதில் அந்த லாரி மற்றும் மினிடெம்போ ஆகியவற்றில் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி இருந்தது.
உடனே போலீசார் அந்த வாகனத்தில் இருந்தவர்களை பிடித்து விசாரணை நடத்தினார்கள். அதில் அவர்கள், கோவை ஆத்துப்பாலத்தை சேர்ந்த பைசல் (வயது 38), பொள்ளாச்சியை சேர்ந்த கனகராஜ் (44) என்பதும் கர்நாடகாவுக்கு ரேஷன் அரிசியை கடத்தி செல்வதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த 2 பேரை கைது செய்தனர்.
மேலும் இந்த லாரி மற்றும் மினி டெம்போவில் இருந்த 11 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த கடத்தல் தொடர்பாக தலைமறைவாக இருக்கும் கோவையை சேர்ந்த நிஷாம், ஜாபர் ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.