கேரளாவுக்கு லாரியில் கடத்திய 11 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு லாரியில் கடத்திய 11 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டிரைவரை கைது செய்து தப்பி ஓடிய 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு லாரியில் கடத்திய 11 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டிரைவரை கைது செய்து தப்பி ஓடிய 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
ரகசிய தகவல்
மயிலாடுதுறை மாவட்டம மணல்மேடு அருகே கடலங்குடி வழியாக ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக மயிலாடுதுறை மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு அலகு சப்-இன்ஸ்பெக்டர் பாரதநேருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன்பேரில் குற்றப்புலனாய்வு போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் 245 மூட்டையில் 11 ஆயிரத்து 110 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.
11 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
பின்னர் லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தினர். இதில் கள்ளசந்தையில் விற்பனை செய்ய கடலங்குடி பகுதியில் ரேஷன் அரிசியை வாங்கி லாரி மூலமாக கேரளாவுக்கு கடத்தி சென்றது தெரிய வந்தது. இதை தொடர்ந்து 11 டன் ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியையும் பறிமுதல் செய்தனர்.இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது53) என்பவரை கைது செய்தனர்.
தப்பி ஓடிய 2 பேருக்கு வலைவீச்சு
மேலும் தப்பி ஓடிய தர்மராஜ் மற்றும் வாகன உரிமையாளர் சுரேஷ்குமார் ஆகிய 2 பேரையும் வலைவீசி தேடிவருகின்றனர். நள்ளிரவில் வெளிமாநிலத்திற்கு கடத்தப்பட்ட 11 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் மயிலாடுதுறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.