கோத்தகிரி மாரியம்மன் கோவிலில் 108 விளக்கு பூஜை-ஏராளமான பெண்கள் பங்கேற்பு
கோத்தகிரி மாரியம்மன் கோவிலில் 108 விளக்கு பூஜை- ஏராளமான பெண்கள் பங்கேற்பு
கோத்தகிரி
கோத்தகிரி கடைவீதி பகுதியில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் வருடாந்திர உற்சவ திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான கோவில் திருவிழா கடந்த 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று காலை 11 மணிக்குஅம்மனுக்கு அபிஷேக, மலர் அலங்கார பூஜைகள் நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மாலை 3 மணிக்கு கோவில் வளாகத்தில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் ஏராளமான சுமங்கலிப் பெண்கள் பங்கேற்று விளக்கு பூஜை செய்து அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து மாலை 6 மணிக்கு கோவிலில் அக்கினி பூச்சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று காலை 11 மணிக்கு அபிஷேக அலங்கார பூஜையும், 1 மணிக்கு அன்னதானம் மற்றும் கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. வருகிற மே 2-ந்தேதி வரை நடக்கும் இந்த திருவிழாவில் அம்மன் அழைப்பு, அம்மனுக்கு திருக்கல்யாணம் மற்றும் அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் வீற்றிருந்து பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி உள்ளிட்டவை நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.