மரத்தின் மீது 108 ஆம்புலன்ஸ் மோதி டிரைவர், மருத்துவ உதவியாளர் படுகாயம்
மரத்தின் மீது 108 ஆம்புலன்ஸ் மோதி டிரைவர், மருத்துவ உதவியாளர் படுகாயம் அடைந்தனர்.
திருவாரூர் மாவட்டம் மணலி பகுதியைச் சேர்ந்தவர் பூபேஷ் (வயது 40). இவர் முத்துப்பேட்டையில் 108 ஆம்புலன்ஸ் டிரைவராக பணி புரிந்து வருகிறார். அதே ஆம்புலன்சில் திருவாரூர் அருகே மாங்குடியை சேர்ந்த சத்யராஜ் (34) என்பவர் மருத்துவ உதவியாளராக பணி புரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று அதிகாலை முத்துப்பேட்டையில் உடல்நிலை பாதிக்கப்பட்ட ஒருவரை ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பூபேசும், சத்யாராஜூம் அனுமதித்துள்ளனர். அதனை தொடர்ந்து மீண்டும் முத்துப்பேட்டை சென்று கொண்டிருந்தனர். திருநெய்பேர் என்கிற இடத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி ஆம்புலன்ஸ், சாலையோரத்தில் உள்ள புளிய மரத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் டிரைவர் புபேஷ் மற்றும் மருத்துவ உதவியாளர் சத்யராஜ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து திருவாரூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.