வேலூரில் 101.5 டிகிரி வெயில்
வேலூரில் வெயில் தொடர்ந்து அதிகரித்து நேற்று 101.5 டிகிரி பதிவானது. அனல் காற்றால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு
கோடைக்காலத்தில் மற்ற மாவட்டங்களை விட வேலூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படும். குறிப்பாக ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாத தொடக்கத்தில் வெயில் வாட்டி வதைக்கும். தினமும் 100 டிகிரி வெயில் பதிவாகும். கத்திரி வெயில் என்று அழைப்படும் அக்னி நட்சத்திரம் சமயத்தில் உச்சபட்சமாக 110 டிகிரி வரை வெயில் அளவு பதிவாகும்.
மற்ற மாதங்களில் வெயிலின் தாக்கம் குறைவாக காணப்படும். ஆனால் இந்தாண்டு வழக்கத்தை விட ஆகஸ்டு மாதத்தில் வெயில் சுட்டெரிக்கிறது. கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக வெயில் சதமடித்து வருகிறது. கடந்த 3-ந் தேதி 100.9 டிகிரியும், 4-ந் தேதி 97.3 டிகிரியும், நேற்று முன்தினம் 100.9 டிகிரியும் வெயில் பதிவானது.
101.5 டிகிரி...
இந்த நிலையில் நேற்று காலை வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. காலை 10 மணியளவில் உச்சி வெயிலை போன்று சூரியன் சுட்டெரித்தது. மதியம் 12 மணியளவில் வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் கடுமையாக காணப்பட்டது. அதிகபட்சமாக 101.5 டிகிரி வெயில் நேற்று பதிவானது.
சுட்டெரித்த வெயிலால் வேலூர் மாநகரின் முக்கிய சாலைகளில் மதிய வேளையில் பொதுமக்கள் நடமாட்டம் குறைவாகவே காணப்பட்டது. இளநீர், கரும்புசாறு, குளிர்பானம், ஜஸ்கிரீம், ஜூஸ் கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. பகல், மாலை வேளையில் அனல் காற்று வீசியதால் சாலையில் நடந்து சென்ற பொதுமக்கள், இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் அவதிக்கு உள்ளாகினர். வெயில் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.