வள்ளியூர் பகுதியில் சூறைக்காற்றால் 10 ஆயிரம் வாழைகள் முறிந்தன
வள்ளியூர் பகுதியில் சூறைக்காற்றால் 10 ஆயிரம் வாழைகள் முறிந்து விழுந்தன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர்.
வள்ளியூர் (தெற்கு):
வள்ளியூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக சூறைக்காற்று வீசியது. இதில் தெற்கு வள்ளியூர், சண்முகபுரம், குளத்துகுடியிருப்பு, கேசவனேரி, ராஜாபுதூர், பணகுடி, சிவகாமிபுரம், புஷ்பவனம், ரோஸ்மியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டு இருந்த ஏத்தன், ரசகதலி, கற்பூரவல்லி, நாடு உள்ளிட்ட வகை வாழை மரங்கள் முறிந்து விழுந்தன.
பெரும்பாலான வாழைகள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் சூறைக்காற்றில் சாய்ந்ததால் விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் வேதனை அடைந்து உள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ''வள்ளியூர், பணகுடி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக வீசிய சூறைக்காற்றில் 10 ஆயிரம் வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்து உள்ளன. இதனால் விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்'' என்று தெரிவித்தனர்.