பொங்கல் பரிசுடன் ரூ.1,000 வழங்கவீடு, வீடாக டோக்கன் வினியோகம் தொடக்கம்

பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1,000 வழங்குவதற்கு வீடு, வீடாக டோக்கன் வினியோகம் செய்யும் பணி தொடங்கியது.

Update: 2023-01-03 18:45 GMT

பொங்கல் பரிசு

தமிழக அரசு பொங்கல் பண்டிகையையொட்டி ரேஷன் கடைகள் மூலம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு ஆகியவற்றுடன் ரூ.1,000 வழங்க உத்தரவிட்டது. இதற்காக வீடு, வீடாக டோக்கன் வழங்கவும் அரசு உத்தரவிட்டது.

அதன்படி தமிழகத்தில் ரேஷன் கடை பணியாளர்கள் மூலம் வீடு, வீடாக டோக்கன் வினியோகம் செய்யும் பணி நேற்று தொடங்கியது. அதன்படி, தேனி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் ரேஷன் கடை பணியாளர்கள் டோக்கன் வினியோகம் செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர். அந்த டோக்கனில் எந்த தேதியில், எந்த நேரத்தில் கடைக்கு வந்து பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1,000 பெற்று செல்வது என்பது தொடர்பாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

4¼ லட்சம் கார்டுதாரர்கள்

இந்த டோக்கன் வினியோகம் செய்யும் பணி வருகிற 8-ந்தேதி வரை நடக்கிறது. 9-ந்தேதி பொங்கல் பரிசு மற்றும் ரொக்கம் வினியோகம் செய்யும் பணி தொடங்குகிறது.இதுதொடர்பாக கூட்டுறவுத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "தேனி மாவட்டத்தில் மொத்தம் 4 லட்சத்து 30 ஆயிரத்து 631 ரேஷன் கார்டுகள் உள்ளன. இதில் 4 லட்சத்து 26 ஆயிரத்து 872 கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படுகிறது. இதற்காக கரும்பு கொள்முதல் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. அரசு ஒதுக்கீடு செய்துள்ள நிதியின் கீழ் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கரும்பு கொள்முதல் செய்யப்பட உள்ளது. ரேஷன் கார்டுதாரர்களுக்கு வீடு, வீடாக டோக்கன் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஒரு நாளைக்கு 200 முதல் 300 பேருக்கு வீதம் அவை வழங்கப்பட உள்ளது. இதற்காக வருகிற 13-ந்தேதி ரேஷன் கடைகளுக்கு வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்