744 மாணவிகளுக்கு மாதம் ரூ.1000
கடலூர் மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் 744 மாணவிகளுக்கு 1000 ரூபாயை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வழங்கினார்.
கடலூர்:
மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டத்தின் வாயிலாக புதுமைப் பெண் என்ற திட்டத்தை இன்று சென்னையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியை கடலூர் மாவட்டத்தில் நேரடி ஒளிபரப்பாக காணும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
அதாவது, கடலூர் புனித வளனார் கல்லூரியில் அகன்ற திரையில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. அதை யடுத்து கடலூரில் நடந்த நிகழ்ச்சிக்கு தமிழக வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமை தாங்கி, புதுமைப்பெண் திட்டத்தில் முதல் கட்டமாக 744 மாணவிகளுக்கு வரவேற்பு பெட்டகப் பை மற்றும் மாதம் ரூ.1000 உதவித்தொகை பெறுவதற்கான வங்கி ஏ.டி.எம். கார்டு ஆகியவற்றை வழங்கி பேசினார்.
அப்போது அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசியதாவது:-
3304 பேர் விண்ணப்பம்
கடலூர் மாவட்டத்தில் இந்த திட்டத்தின் வாயிலாக உதவித்தொகை வேண்டி 3304 மாணவிகள் இணையதளத்தில் விண்ணப் பித்துள்ளனர். உயர்கல்வியில் இடைநிற்றல் இன்றி கல்வி பயில வேண்டும் என்ற சில நிபந்தனைகளுக்குட்பட்டு தற்போது முதற்கட்டமாக மாவட்டத்தில் 744 மாணவிகளுக்கு மாதம் தலா ரூ.1000 வழங்கப்பட்டுள்ளது. பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் தொடர்ந்து தகுதியுள்ள அனைவருக்கும் உதவித்தொகை வழங்கப்படும்.
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவீதம் பெண்கள் பதவி வகித்து வருகின்றனர். இதற்கு காரணம் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின். பெண்கள் படித்தால் தான் அடுத்த சந்ததியினரும் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய ஏதுவாக இருக்கும். பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 15-ந்தேதி தொடங்கி வைக்க இருக்கிறார்.
இவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசினார்.
விழாவில் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். இதில் எம்.எல்.ஏ.க்கள் அய்யப்பன், சபா.ராஜேந்திரன், ராதாகிருஷ்ணன், கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன், கூடுதல் கலெக்டரும், திட்ட இயக்குனருமான பவன்குமார் ஜி.கிரியப்பனவர், மாநகர தி.மு.க. செயலாளர் கே.எஸ்.ராஜா, ஒன்றிய செயலாளர் விஜயசுந்தரம், நகர துணை செயலாளர் அகஸ்டின் பிரபாகரன், இலக்கிய அணி செந்தில், மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், மாணவிகள், கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள், தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.