வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் திருவிழாவுக்கு 100 சிறப்பு பஸ்கள்

தேனி, திண்டுக்கல் உள்பட 12 ஊர்களில் இருந்து வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் திருவிழாவுக்கு 100 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

Update: 2023-05-06 15:51 GMT

கவுமாரியம்மன் கோவில் திருவிழா

தேனி மாவட்டம் வீரபாண்டியில் பிரசித்தி பெற்ற கவுமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் திருவிழா நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி தேனி, திண்டுக்கல், மதுரை உள்பட பல மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கும், நேர்த்திக்கடன் செலுத்துவதற்கும் வீரபாண்டிக்கு வருவார்கள்.

அதேநேரம் தேனி மாவட்டத்துக்கு மதுரையில் இருந்து மட்டுமே ரெயில்கள் இயக்கப்படுகின்றன. அதுவும் போதிய அளவில் ரெயில் சேவை இல்லை. இதனால் பக்தர்கள் பஸ்களில் மட்டுமே பயணித்து வரும் நிலை உள்ளது. எனவே பக்தர்கள் சிரமம் இல்லாமல் வீரபாண்டிக்கு சென்று கவுமாரியம்மனை வழிபட்டு செல்லும் வகையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் திண்டுக்கல் மண்டலம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

100 சிறப்பு பஸ்கள்

அதன்படி மதுரை, திண்டுக்கல், பெரியகுளம், தேனி, கம்பம், போடி, கூடலூர், ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி, சின்னமனூர், தேவாரம் மற்றும் உத்தமபாளையம் ஆகிய 12 ஊர்களில் இருந்து வீரபாண்டிக்கும், வீரபாண்டியில் இருந்து மேற்கண்ட ஊர்களுக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அந்த வகையில் மொத்தம் 100 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

இந்த சிறப்பு பஸ்கள் அனைத்தும் நாளை மறுநாள் முதல் வருகிற 16-ந்தேதி வரை பகலில் மட்டுமின்றி இரவிலும் இயக்கப்படுகிறது. மேலும் பக்தர்களின் வருகைக்கு ஏற்ப கூடுதலாக பஸ்களை இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதுதவிர பக்தர்களுக்கு உதவும் வகையில் 12 ஊர்களின் பஸ் நிலையங்களிலும் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் வழிகாட்டி அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்