ஒரே நாளில் 100 ரேஷன் கடைகள்

கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் 100 ரேஷன் கடைகளை அமைச்சர் முத்துசாமி திறந்து வைத்தார்.

Update: 2023-08-05 19:00 GMT

துடியலூர்

கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் 100 ரேஷன் கடைகளை அமைச்சர் முத்துசாமி திறந்து வைத்தார்.

100 புதிய ரேஷன் கடைகள்

முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா வையொட்டி கோவை மாவட்டத்தில் புதிதாக 100 ரேஷன் கடைகள் அமைக்கப்பட்டு உள்ளது. அதை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில் அப்பநாயக்கன்பாளையத்தில் புதிய ரேஷன் கடையை அமைச்சர் முத்துசாமி திறந்து வைத்தார்.

மேயர் கல்பனா ஆனந்தகுமார் முன்னிலை வைத்தார். முதல் விற்பனையை கவுன்சிலர் கற்பகம் ராஜசேகர் தொடங்கி வைத்தார். கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் எஸ்.பார்த்திபன் வரவேற்று பேசினார்.

அமைச்சர் முத்துசாமி

விழாவில் புதிய 100 ரேஷன் கடைகளின் பெயர் பலகையை வீட்டு வசதி நகர்ப்புறத்துறை அமைச்சர் முத்துசாமி திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

மக்களின் நலனுக்காக 2 மாதங்களில் 100 கடைகளை திறக்க நட வடிக்கை எடுத்தோம். அதை தற்போது செய்து முடித்து இருப்பது பெரிய சாதனை ஆகும். மக்களின் அன்றாட தேவைகளை நிறை வேற்றும் வகையில் திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. அவற்றை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

4 லட்சம் விண்ணப்பம்

கோவை மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் 6 லட்சம் விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டு இருக்கிறது. அதில் 4 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு ஆய்வு பணிகள் நடை பெற்று வருகிறது. உரியவர்களுக்கு பணம் கிடைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் டியுகாஸ் மேலாண்மை இயக்குனர் சிவக் குமார், துணை பதிவாளர் முத்துக்குமார், முன்னாள் எம்.பி. நாகராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி, தி.மு.க. மாவட்ட செயலாளர் தொ.ஆ.ரவி, கார்த்தி டி.பி.சுப்பிரமணியம், அருள் குமார், ராஜசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் துணை பதிவாளர் ராஜேந்திரன் நன்றி கூறினர். விழாவில் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்