கார்காவயல் ஊராட்சியில் 100 எக்டேர் நெற்பயிர்கள் சாய்ந்து நீரில் மூழ்கின
2 நாட்கள் பெய்த மழையால் கார்காவயல் ஊராட்சியில் 100 எக்டேர் நெற்பயிர்கள் சாய்ந்து நீரில் மூழ்கின. பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரம்பயம்:
2 நாட்கள் பெய்த மழையால் கார்காவயல் ஊராட்சியில் 100 எக்டேர் நெற்பயிர்கள் சாய்ந்து நீரில் மூழ்கின. பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
2 நாட்கள் மழை
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து பூமி குளிர்ச்சியானது. இது ஒருபுறம் இருந்தாலும் கோடை நெல் சாகுபடி செய்த சில ஊராட்சிகளில் பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:- கார்கா வயல் ஊராட்சியில் உள்ள கோட்டாக்குடி, கார்காவயல் இரண்டு கிராமத்திலும் சுமார் 100 எக்டேர் நிலப்பரப்பில் விவசாயிகள் கோடை நெல் சாகுபடி செய்துள்ளனர்.
நெற்பயிர்கள் நீரில் மூழ்கின
பயிர்கள் நன்றாக வளர்ந்து கதிர் முற்றி வந்த நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தாலும், வெப்ப சலனத்தாலும் கடந்த 2 நாட்களாக பட்டுக்கோட்டை பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இந்த தொடர் மழையின் காரணமாக கோட்டாக்குடி, கார்காவயல் கிராமங்களில் கோடை நெல் சாகுபடி செய்யப்பட்ட 100 எக்டேர் வயல்களில் தண்ணீர் தேங்கி நெற்பயிர்கள் சாய்ந்து மூழ்கி உள்ளன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
நிவாரணம்
பட்டுக்கோட்டை வேளாண்துறை அதிகாரிகள் நீரில் மூழ்கிய நெற்பயிர்களை ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர்.