100 நாள் வேலை திட்டத்தை விவசாய பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும்

100 நாள் வேலை திட்டத்தை விவசாய பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும் என்று குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

Update: 2023-05-12 17:49 GMT

குறைதீர்வு கூட்டம்

வேலூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் நேற்று நடந்தது. சமூகபாதுகாப்பு திட்ட தாசில்தார் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். கூட்டத்தில் அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகள் மற்றும் குறைகள் குறித்து பேசினர்.

அவர்கள் பேசியதாவது:-

விவசாய பணிகளுக்கு

மாவட்டத்தில் சில பகுதிகளில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை தவறாக பயன்படுத்தி மணல் கடத்துகின்றனர். இதனை தடுத்து நிறுத்த வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை விவசாய பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும். விவசாயிகள் காலத்திற்கு ஏற்றவாறு எந்தவகையான பயிர் செய்யலாம் என்பது தொடர்பாக விழிப்புணர்வு கூட்டம் நடத்த வேண்டும். மேலும் பிரதம மந்திரி திட்டத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடன் விவரங்கள் குறித்து விளக்கி கூற வேண்டும்.

மானிய விலையில்...

விவசாயிகளுக்கு இயற்கை உரங்களை மானிய விலையில் வழங்க வேண்டும். விவசாயிகள் ஏரியில் வண்டல் மண் இலவசமாக எடுத்துக் கொள்ள அனுமதி வழங்க வேண்டும். கத்தரிக்காய், தக்காளி, செண்டுமல்லி உள்ளிட்ட உயர்ந்த வகை விதைகளை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட முக்கிய நாட்களில் கிராமப்புறங்களுக்கு வரும் அரசு டவுன் பஸ்கள் திடீரென நிறுத்தப்படுகிறது. பல கிராமங்களுக்கு இயக்கப்பட்டு வந்த பஸ் சேவையும் நிறுத்தப்பட்டுள்ளதாக புகார்கள் வருகிறது. இதனால் கிராம மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

எனவே தொடர்ந்து அரசு பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தோட்டக்கலை, வேளாண்மை, வேளாண் பொறியியல் துறை சார்பில் விவசாயிகளுக்கான கருத்து பரிமாற்ற கூட்டம் நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் பேசினர்.

Tags:    

மேலும் செய்திகள்