100 நாள் வேலைதிட்ட தொழிலாளர்கள் 200 பேர் திரண்டதால் பரபரப்பு

ஜோலார்பேட்டை அருகே 100 நாள் வேலை நிறுத்தப்பட்டதால் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தொழிலாளர்கள் திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-11-28 18:00 GMT

ஜோலார்பேட்டை அருகே 100 நாள் வேலை நிறுத்தப்பட்டதால் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தொழிலாளர்கள் திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

பணிகள் நிறுத்தம்

ஜோலார்பேட்டையை அடுத்த ரெட்டியூர் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் 150-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த விநாயகமூர்த்தி என்பவர் ரெட்டியூர் ஊராட்சியில் 100 நாள் திட்ட பணியில் தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்டவர்கள் முறைகேடு செய்வதாக பொதுமக்கள் சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்ததாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக ஜோலார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் சம்பந்தப்பட்ட ஊராட்சியில் 100 நாள் திட்டப்பணியை நிறுத்த ஊராட்சி மன்ற தலைவருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து அறிந்ததும் 100 நாள் திட்ட பணியாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் 200-க்கும் மேற்பட்டோர் ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று குவிந்தனர்.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும் 100 நாள் திட்டப்பணியில் தனி நபர் ஒருவர் மட்டும் பொதுமக்கள் சார்பாக முறைகேடு நடப்பதாக மனு அளித்துள்ளார். அந்த மனுவில் நாங்கள் யாரும் கையொப்பமிடவில்லை என்றும், தனிப்பட்ட நபர் கொடுத்த புகார் மனு பொய்யானது எனக் கூறி நூறு நாள் திட்டப்பணியில் எந்தவித முறைகேடும் நடைபெறவில்லை. எனவே 100 நாள் திட்டப் பணியை எங்கள் ஊராட்சியில் நிறுத்தாமல் தொடர்ந்து எங்களுக்கு வேலை வழங்க வேண்டும். பொய்யாக மனு அளித்த தனிநபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வட்டார வளர்ச்சி அலுவலர் தினகரனிடம் மனு அளித்தனர்.

அப்போது ஒன்றிய வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்க வந்த க.தேவராஜி எம்.எல்.ஏ., ஒன்றியக்குழு தலைவர் எஸ்.சத்யா சதீஷ்குமார் ஆகியோரிடம் ஊராட்சி மன்ற தலைவர் மூர்த்தி மற்றும் ஊர் பொதுமக்கள் இது குறித்து முறையிட்டனர்.

அதற்கு அவர்கள் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாதவாறு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்