பலத்த மழையால் 100 ஏக்கர் நெற்பயிர் சேதம்

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றிய பகுதியில் 2 நாள் பெய்த பலத்த மழையால் 100 ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கின. இதனால் நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-09-28 18:45 GMT

திட்டச்சேரி:

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றிய பகுதியில் 2 நாள் பெய்த பலத்த மழையால் 100 ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கின. இதனால் நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மழையால் நெற்பயிர்கள் சேதம்

நாகை மாவட்டம் திருமருகல் வட்டாரத்தில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. தற்போது குறுவை அறுவடை பணிகள் ெதாடங்கி உள்ளது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக இரவில் பெய்த கனமழையால் கீழப்பூதனூர், திருச்செங்காட்டங்குடி, திருமருகல், திருக்கண்ணபுரம், திருப்புகலூர், வடகரை, கோட்டூர், விற்குடி, அம்பல், பொறக்குடி, மருங்கூர், நரிமணம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வயல் மழைநீர் சூழ்ந்தது. நடவு செய்யப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி அழுகும் நிலையில் உள்ளது. தற்போது மழை நீர் வடிய தொடங்கி வருகிறது. இதை பயன்படுத்தி சாய்ந்து கிடக்கும் நெற்பயிர்களை அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு உள்ளனா்.

நிவாரணம்

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

நாங்கள்(விவசாயிகள்) ஏக்கருக்கு ரூ.25 ஆயிரத்திற்கு மேல் செலவு செய்து நன்கு வளர்ந்த நெற்பயிர்கள் அறுவடை செய்ய காத்திருந்தோம். இந்த நேரத்தில் பெய்த மழையால் பயிர்கள் சாய்ந்து விட்டன. இதனால் சாய்ந்து கிடக்கும் நெற்பயிர்களை அறுவடை எந்திரங்கள் கொண்டு அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.எனவே மழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை முறைப்படி கணக்கெடுத்து பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஈரப்பதத்தை கணக்கிடாமல் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்