தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை போக்சோ கோர்ட்டு தீர்ப்பளித்தது.

Update: 2023-08-25 19:00 GMT
கோவை


சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை போக்சோ கோர்ட்டு தீர்ப்பளித்தது.


14 வயது சிறுமி


கோவை போத்தனூர் கருணாநிதி நகரை சேர்ந்தவர் குமார் (வயது 36), கூலி தொழிலாளி. இவர் 14 வயதான சிறுமியுடன் பழகி வந்தார். பின்னர் அவர் அந்த சிறுமியிடம் காதலிப்பதாக கூறி தொந்தரவு கொடுத்து உள்ளார்.


இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18-ந் தேதி இரவு அந்த சிறுமியின் வீட்டுக்கு சென்ற குமார், ஜன்னல் வழியாக சிறுமியை வெளியே வரச்சொன்னார். அதற்கு அந்த சிறுமி மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர், நீ வெளியே வரவில்லை என்றால் நான் தற்கொலை செய்து விடுவேன் என்று கூறி மிரட்டி உள்ளார்.


பாலியல் தொந்தரவு


இதனால் அந்த சிறுமி வீட்டின் பின்பக்க கதவை திறந்தார். அப்போது அங்கு வந்த குமார், நான் சொல்வதற்கு நீ சம்மதிக்க வேண்டும், இல்லை என்றால் உனது பெற்றோரை கொலை செய்து விடுவேன் என்று கூறி அந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து உள்ளார்.


இதுபோன்று அவர் பலமுறை சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார். இது பற்றி அந்த சிறுமி தனது தாயிடம் கூறி அழுதார். அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் கோவை மாநகர மகளிர் போலீசார் போக்சோ மற்றும் கொலை மிரட்டல் பிரிவில் வழக்குப்பதிவு செய்து குமாரை கைது செய்தனர்.


10 ஆண்டு சிறை


இந்த வழக்கு கோவையில் உள்ள போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்ததை தொடர்ந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

இதில் குற்றம் சாட்டப்பட்ட குமாருக்கு, போக்சோ பிரிவில் 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், கொலை மிரட்டல் பிரிவுக்கு 1 ஆண்டு சிறையும் ரூ.1000 அபராதமும் விதித்து நீதிபதி குலசேகரன் தீர்ப்பளித்தார்.

மேலும் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.


இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ரஷீதாபேகம் ஆஜராகி வாதாடினார்.


மேலும் செய்திகள்