தீயணைப்பு வீரருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

நாகர்கோவிலில் முருங்கை மரத்தை வெட்டியதை தடுத்தவரை வெட்டு கத்தியால் வெட்டிய தீயணைப்பு வீரருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

Update: 2023-06-13 18:45 GMT

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் முருங்கை மரத்தை வெட்டியதை தடுத்தவரை வெட்டு கத்தியால் வெட்டிய தீயணைப்பு வீரருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

வெட்டு கத்தியால் வெட்டு

நாகர்கோவில் மேல பெருவிளை சலேட்மாதா தெருவை சேர்ந்தவர் ஜோசப் ஆண்டனி (வயது 42). இவர் 16-6-2021 அன்று பிளசன்ட்நகருக்கு சென்றார். அப்போது அங்கு பொதுபாதையில் நின்ற முருங்கை மரத்தை அதே பகுதியை சேர்ந்த தீயணைப்பு வீரரான ஆரோக்கிய செல்வன் (45) உள்பட 4 பேர் வெட்டிக் கொண்டிருந்தனர்.

அதை பார்த்த ஜோசப் ஆண்டனி மரம் வெட்டுவதை தடுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த ஆரோக்கிய செல்வன் வெட்டு கத்தியால் ஜோசப் ஆண்டனியை சரமாரியாக வெட்டி, கொலை மிரட்டலும் விடுத்தார். இதுகுறித்து ஆசாரிபள்ளம் போலீஸ் நிலையத்தில் ஜோசப் ஆண்டனி புகார் செய்தார். அதன்பேரில் ஆரோக்கிய செல்வன் உள்பட 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

10 ஆண்டு சிறை

இந்த வழக்கு நாகர்கோவிலில் உள்ள இரண்டாவது கூடுதல் உதவி அமர்வு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை நீதிபதி அசன் முகமது விசாரணை நடத்தி நேற்று தீர்ப்பு கூறினார்.

அதில் ஆரோக்கிய செல்வனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்தார். அபராதத்தை கட்ட தவறினால் கூடுதலாக 3 மாதம் ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது. மற்ற 3 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் அரசு வக்கீல் செந்தில் மூர்த்தி ஆஜராகி வாதாடினார்.

Tags:    

மேலும் செய்திகள்