கன்டெய்னர் லாரியில் கடத்திய 10 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
நாட்டறம்பள்ளி அருகே கன்டெய்னர் லாரியில் வெளி மாநிலத்திற்கு கடத்திய 10 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. தப்பி ஓடிய டிரைவரை போலிசார் தேடி வருகின்றனர்.
ரேஷன் அரிசி கடத்தல்
நாட்டறம்பள்ளி பகுதியில் இருந்து வெளி மாநிலத்திற்கு லாரி மூலம் ரேசன் அரிசி கடத்தப்படுவதாக திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் நாட்டறம்பள்ளி தாசில்தார் க.குமார் தலைமையில் வருவாய்த் துறையினர் நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணியளவில் நாட்டறம்பள்ளி அருகே பணியாண்டப்பள்ளி பகுதியில் உள்ள வாலூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த தமிழக பதிவு எண் கொண்ட கன்டெய்னர் லாரி ஒன்று வேகமாக வந்தது. அந்த லாரியை நிறுத்துமாறு வருவாய்த் துறையினர் சைகை காட்டினர். உடனே டிரைவர் லாரியை, சாலை ஓரமாக நிறுத்தி விட்டு, தப்பி ஓடினார்.
10 டன் பறிமுதல்
இதனால் சந்தேகம் அடைந்த வருவாய்த் துறையினர் கன்டெய்னர் லாரியை திறந்து சோதனை செய்தனர். அதில் மூட்டை மூட்டையாக 10 டன் ரேஷன் அரிசி இருந்தது. இந்த அரிசியை வெளி மாநிலத்திற்கு கடத்த முயன்றது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து லாரியுடன் ரேஷன் அரிசியை நாட்டறம்பள்ளி பகுதியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர்.
மேலும் இது குறித்து வருவாய்த்துறையினர் கொடுத்த புகாரின் பேரில் நாட்டறம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து அரிசி கடத்தியவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.