யாசகம் மூலம் பெற்ற ரூ.10 ஆயிரத்தைமுதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கிய முதியவர்
தேனியில் யாசகம் மூலம் பெற்ற ரூ.10 ஆயிரத்தை முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு முதியவர் வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஆழங்கிணறு பகுதியை சேர்ந்தவர் பூல்பாண்டியன் (வயது 73). இவர் பொதுமக்களிடம் யாசகம் (பிச்சை) எடுத்து அந்த பணத்தை முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
அவர் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தார். கலெக்டர் அலுவலகத்தில் இருந்த அதிகாரிகளை சந்தித்து, தான் யாசகம் மூலம் பெற்ற ரூ.10 ஆயிரத்தை முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் செலுத்த விரும்புவதாக கூறினார். அப்போது அங்கிருந்த அதிகாரிகள், வங்கிக் கணக்கு மூலம் நிதியை அனுப்புமாறு கூறினர். பின்னர் அவர் அங்கு வங்கிக் கணக்கு விவரங்களை பெற்றுக் கொண்டார்.
பின்னர் தேனியில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கு சென்றார். அந்த வங்கி மூலம் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 ஆயிரத்தை அனுப்பினார். இதுகுறித்து பூல்பாண்டியன் கூறும்போது, "திருமணமாகி 3 பிள்ளைகள். ஆன்மிகம் மீதான நாட்டம் காரணமாக நான் யாசகம் எடுத்து அந்த பணத்தில் பிறருக்கு உதவி செய்து வந்தேன். ஆரம்ப காலங்களில் பள்ளிகளுக்கு தேவையான உதவிகளை செய்து வந்தேன். 2020-ம் ஆண்டு கொரோனா பரவியதால் முதல்-அமைச்சரின் நிவாரண நிதிக்கு பணம் செலுத்தி வருகிறேன். இதுவரை 36 மாவட்டங்களுக்கு சென்று முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பணம் செலுத்தி இருக்கிறேன். தற்போது தேனி மாவட்டத்துக்கு வந்தேன். யாசகம் பெற்றதில் கிடைத்த சில்லரையை கடைகளில் கொடுத்து ரூ.500 நோட்டுகளாக மாற்றினேன். அதை முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அனுப்பி இருக்கிறேன். எனது இறுதி வாழ்க்கை முடியும் வரை இந்த சேவையை செய்து கொண்டே இருப்பேன்" என்றார்.