10 ரூபாய் நாணயம் செல்லுமா? செல்லாதா?; வதந்தியால் வாங்க தயங்கும் மக்கள், வியாபாரிகள்
செல்லுமா, செல்லாதா என 10 ரூபாய் நாணயம் மீது தொடர்ந்து பற்றிக்கொள்ளும் வதந்தியால் அதை வியாபாரிகள், பொதுமக்கள் சிலர் வாங்க தயங்கும் நிலைமை உள்ளது.
செல்லுமா, செல்லாதா என 10 ரூபாய் நாணயம் மீது தொடர்ந்து பற்றிக்கொள்ளும் வதந்தியால் அதை வியாபாரிகள், பொதுமக்கள் சிலர் வாங்க தயங்கும் நிலைமை உள்ளது.
10 ரூபாய் நாணயம்
மக்களிடம் புழங்கும் ரூபாய் நோட்டுகளில் 10 ரூபாய்க்கு முக்கிய இடம் உண்டு. சாலையோர கடைகள் முதல் பிரமாண்ட வணிக வளாகம் வரை 10 ரூபாய் பயன்பாடு அதிகம் உள்ளது. அதிக புழக்கத்தில் இருப்பதாலேயே நோட்டுகள் அழுக்கடைந்து விடுகிறது. இதனால் ரிசர்வ் வங்கி 10 ரூபாய் நாணயத்தை வெளியிட்டது.
இந்த நாணயம் புழக்கத்தில் வந்த போது மக்களால் அதிகம் விரும்பப்பட்டது. பலரும் வீடுகளில் ஆசைக்கு சில நாணயங்களை வாங்கி வைத்து அழகு பார்க்கும் மனநிலைக்கு தள்ளப்பட்டனர். பார்க்கவே அழகாக இருக்கும் அந்த நாணயம் திடீரென்று செல்லாது என்ற வதந்தி தமிழகத்தில் பல மாவட்டங்களில் பரவியது. அப்படியே அந்த வதந்தி தேனி மாவட்டத்திலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பரவியது.
வாங்க தயக்கம்
வணிகர்களிடம் இருந்து பொதுமக்களும், மக்களிடம் இருந்து வணிகர்களும் மாறிமாறி வாங்க மறுத்தனர். இந்த நாணய புறக்கணிப்பு அதோடு நிற்காமல், சில வங்கிகளிலும் வாங்க மறுத்ததால் இந்த விவகாரம் பூதாகரமாக கிளம்பியது. இதை கவனத்தில் எடுத்த இந்திய ரிசர்வ் வங்கி 10 ரூபாய் நாணயம் செல்லும் என்று அறிவித்தது.
இதையடுத்து 10 ரூபாய் நாணயம் மீண்டும் புழக்கத்தில் வரத் தொடங்கியது. ஆனாலும் இன்னும் ஆங்காங்கே இதை வாங்க தயக்கம் காட்டும் சம்பவங்கள் மக்களிடமும், வியாபாரிகளிடமும் நிலவி வருகிறது. குறிப்பாக பஸ்களில் வாங்க மறுக்கும் சம்பவங்களும் நடக்கின்றன.
பஸ்களில் மறுப்பு
இதுகுறித்து தேனியை சேர்ந்த டீக்கடைக்காரர் ஜீவா கூறியதாவது:-
தேனி மாவட்டத்தில் பெரும்பாலும் 10 ரூபாய் நாணயங்கள் வாங்கப்படுகிறது. ஆனால், திண்டுக்கல், மதுரை மாவட்டங்களுக்கு செல்லும் போது பஸ்களிலும், கடைகளிலும் வாங்க மறுக்கின்றனர். இதனால் வெளியூர்களில் இருந்து வரும் மக்களிடம் 10 ரூபாய் நாணயத்தை கொடுத்தால் வாங்க மறுக்கின்றனர். சமீபத்தில் நான் மதுரைக்கு சென்றபோது அங்கு பஸ்சில் 10 ரூபாய் நாணயத்தை கொடுத்த போது கண்டக்டர் வாங்க மறுத்தார்.
காரணம் கேட்டபோது நிறைய பேர் இதேபோல் நாணயங்கள் கொடுப்பதாகவும், திருப்பிக்கொடுத்தால் வாங்க மறுப்பதாகவும் கூறினார். உடனே நான் அவரிடம் 100 ரூபாய் நோட்டை கொடுத்து 10 ரூபாய் நாணயங்களாக சில்லரை கேட்டேன். அவரும் மகிழ்வோடு சில்லரை கொடுத்தார். பின்னர் 10 ரூபாய் நாணயத்தை கொடுத்தவுடன் பெற்றுக்கொண்டு டிக்கெட் கொடுத்தார். எனவே, 10 ரூபாய் நாணயம் செல்லும் என்பதை பொது இடங்களில் அரசு சார்பிலோ, வங்கிகள் சார்பிலோ அறிவிப்பாக வைக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கம்பத்தை சேர்ந்த பஸ் கண்டக்டர் குமார் கூறுகையில், "10 ரூபாய் நாணயங்களை வாங்குவதற்கு மக்கள் பலர் மறுக்கின்றனர். இதனால் எங்களிடம் நாணயம் அதிகம் சேருகிறது. தினமும் பணி முடிந்து கலெக்சன் தொகையை எண்ணும் போது 10 ரூபாய் நாணயங்கள் குவிந்து விடுகிறது. அதை ரூபாய் நோட்டாக மாற்றுவதற்குள் போதும், போதும் என்றாகி விடுகிறது" என்றார்.
குழப்பம் தீர்க்க வழி
கம்பத்தில் மளிகை கடை நடத்தும் லட்சுமணகுமார் கூறுகையில், "மக்களிடம் இருந்து நான் 10 ரூபாய் நாணயங்களை வாங்கிக்கொள்கிறேன். ஆனால், மக்கள் பலர் என்னிடம் இருந்து 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கின்றனர். நாணயத்தை கொடுத்தால், நோட்டாக கொடுங்கள் என்கிறார்கள். இதனால் என்னிடம் நாணயம் அதிகம் சேர்ந்து விடுகிறது. மக்களிடம் இன்னும் இந்த நாணயம் செல்லாமல் போய்விடும் என்ற அச்சம் இருப்பதை பார்க்க முடிகிறது. வியாபாரம் நடக்க வேண்டும் என்பதால் மக்கள் கொடுக்கும் நாணயங்களை வாங்கிக்கொள்கிறேன்.
மொத்தமாக கொண்டு சென்று வங்கிக்கணக்கில் செலுத்தவோ அல்லது ரூபாய் நோட்டாக மாற்றச்சென்றாலோ வங்கியில் தாமதம் ஏற்படுகிறது. ஒரே நேரத்தில் ரூ.500-க்கு தான் நாணயம் வாங்கிக்கொள்கின்றனர். அதையும் எண்ணி சரிபார்க்க அதிக நேரம் ஆகிறது. இதனால், தொழில் பாதிக்கப்படுகிறது. எனவே, வங்கியில் நாணயங்கள் எண்ணுவதற்கும் எந்திரம் வைக்க வேண்டும்" என்றார்.
தேனியை சேர்ந்த கல்லூரி மாணவர் அபினேஷ் கண்ணா கூறுகையில், "10 ரூபாய் நாணயங்கள் மீதான வதந்தி மக்களிடமும், வியாபாரிகளிடமும் தொடர்ந்து சுற்றுகிறது. இது நாணயங்கள் மீதான புழக்கத்தை முடக்க வாய்ப்புள்ளது. ரிசர்வ் வங்கி ஏற்கனவே வெளிப்படையாக அறிவித்த போதிலும் இந்த நிலை தொடர்கிறது. எனவே, வணிக நிறுவனங்களிலும், பஸ்களிலும் 10 ரூபாய் நாணயம் பெற்றுக்கொள்ளப்படும் என்பது குறித்த விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டினால் மக்களிடம் உள்ள தேவையற்ற குழப்பம் தீரும்" என்றார்.