ஓசூரில் ரூ.1¾ லட்சத்துக்கு ரூ.10 நாணயங்களை வழங்கி மோட்டார் சைக்கிள் வாங்கிய வாலிபர்
ஓசூர்:
ஓசூர் அருகே உள்ள கெலமங்கலத்தை சேர்ந்தவர் ராஜீவ் (வயது 30). இவர் அங்குள்ள தனியார் கிளினிக்கில் நிர்வாக இயக்குனராக வேலை பார்த்து வருகிறார். இவர் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளை வாங்க எண்ணினார். அதன்படி ஓசூரில் உள்ள மோட்டார் சைக்கிள் ஷோரூமுக்கு சென்றார். அப்போது அவர் 8 மூட்டைகளில் கொண்டு வந்த ரூ.10 நாணயங்களை ஷோரூம் ஊழியர்களிடம் வழங்கி, மோட்டார் சைக்கிளை வாங்கினார்.
இதுகுறித்து வாலிபர் ராஜீவ் கூறுகையில், பொதுமக்களிடம் ரூ.10 நாணயங்கள் வாங்கும் பழக்கம் குறைந்துள்ளது. எனவே இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே ரூ.3 லட்சம் மதிப்பிலான மோட்டார் சைக்கிளை ரூ.10 நாணயங்களை கொடுத்து வாங்கினேன். இதற்காக எனது நண்பர்கள் சாதிக், யுவராஜ் ஆகியோருடன் கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு இடங்களுக்கு சென்று நாணயங்களை சேகரித்தேன் என்றார். இதையடுத்து ஷோரூம் ஊழியர்கள் 8 மூட்டைகளில் இருந்த ரூ.10 நாணயங்களை 3 மணி நேரமாக எண்ணினர். அதில் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் இருந்தது. மோட்டார் சைக்கிளுக்கான மீதி தொகை ராஜீவ் தவணையாக செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டது.