சங்ககிரி அருகே லாரி உரிமையாளர் வீட்டில் 10 பவுன் நகை, பணம் திருட்டு
சங்ககிரி அருகே லாரி உரிமையாளர் வீட்டில் 10 பவுன் நகை, பணம் திருட்டு போனது. இது தொடர்பாக மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
சங்ககிரி:
லாரி உரிமையாளர்
சங்ககிரி அருகே மாவெளிபாளையம் தோப்புகாடு பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ்வரன் (வயது 31). லாரி உரிமையாளர். அவர் தொழில் சம்பந்தமாக வெளியூர் சென்றுவிட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் உள்ள படுக்கை அறையில் வெங்கடேஷ்வரனின் மனைவி மீனாட்சி, தனது மகனுடன் தூங்க சென்று விட்டார்.
மேலும் வெங்கடேஷ்வரின் தாயார் வளர்மதி வீட்டு கதவுகளை வெளிப்புறம் பூட்டிவிட்டு, வராண்டாவில் சாவியை தலையணை அடியில் வைத்துக்கொண்டு தூங்கினார். அவருடன் பச்சப்பட்டியை சேர்ந்த விவசாய வேலையாள் குப்பாயி என்பவரும் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார்.
நகை, பணம் திருட்டு
நள்ளிரவில் 1.45 மணியளவில் இயற்கை உபாதையை கழிக்க வளர்மதி எழுந்துள்ளார். அப்போது பூட்டு திறக்கப்பட்டு, கதவு திறந்து இருந்ததை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் வீட்டுக்குள் சென்று பார்த்த போது 10 பவுன் நகைகள் மற்றும் ரூ.50 ஆயிரம் ஆகியவை திருட்டு போனது தெரியவந்தது. வீட்டுக்கு வெளியே தூங்கிக்கொண்டிருந்த வளர்மதியின் தலையணைக்கு அடியில் இருந்து சாவியை எடுத்து கதவை திறந்து, நைசாக வீட்டுக்குள் சென்ற மர்ம நபர்கள், நகை, பணத்ைத திருடிச்சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ், சங்ககிரி போலீஸ் துணை சூப்பிரண்டு ஆரோக்கியராஜ் சம்பவ இடத்தில் நேரில் சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு பதிவான ரேகைகளை பதிவு செய்தனர். மேலும் புகாரின் பேரில் சங்ககிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி ேதடி வருகிறார்கள்.
இதனிடையே சங்ககிரி ஐவேலி அக்கமாபேட்டையில் முருகேசன் என்பவருடைய வீட்டிலும் மர்ம நபர்கள் திருட முயன்றதாக தெரிகிறது. இது தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.