கோத்தகிரியில் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை திருட்டு-மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

கோத்தகிரியில் பூட்டியிருந்த வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2023-07-05 14:52 GMT

கோத்தகிரி

கோத்தகிரியில் பூட்டியிருந்த வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

வீட்டின் பூட்டு உடைப்பு

கோத்தகிரி சேட்லைன் பகுதியில் குடியிருந்து வருபவர் பூங்கொடி (வயது 57). இவர் குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலராக குன்னூரில் பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் துரைசாமி கடந்த ஜனவரி மாதம் இறந்து விட்டார். இவரது மகன் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். மகள் திருமணமாகி ஈரோட்டில் வசித்து வருகிறார். இந்தநிலையில் தனது மகளுக்கு குழந்தை பிறந்துள்ளதால் குழந்தையைப் பார்ப்பதற்காக பூங்கொடி கடந்த 1-ந்தேதி தனது வீட்டை பூட்டி விட்டு ஈரோடு சென்றுள்ளார். நேற்று காலை அவரது வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வரும் சக்திவேல் என்பவர் பூங்கொடிக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உங்கள் வீட்டின் முன் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளதாக தகவல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

10 பவுன் நகை

இதையடுத்து அவர் விரைந்து கோத்தகிரிக்கு வந்து வீட்டுக்குள் சென்று சோதித்து பார்த்த போது, வீட்டில் கட்டிலுக்கு கீழே மறைத்து வைத்திருந்த தகர பெட்டியின் பூட்டை உடைத்து அதற்குள் இருந்த 5½ பவுன் தங்க சங்கிலி ஒன்று உள்பட 10 பவுன் எடை கொண்ட தங்க நகைகள் காணாமல் போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் வீட்டில் ஆள் இல்லை என்பதை அறிந்து கொண்ட மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து நகையை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அவர் கோத்தகிரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சப் -இன்ஸ்பெக்டர் பப்பிலா ஜாஸ்மின் வழக்குப் பதிவு செய்து, திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்