வேன் மரத்தில் மோதி 10 பேர் காயம்

கொல்லிமலைக்கு சுற்றுலா வந்த வேன் மரத்தில் மோதி 10 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2023-08-04 18:45 GMT

சேந்தமங்கலம்

சுற்றுலா வேன்

ஈரோடு மாவட்டம் சுவாமிநாத புரத்தைச் சேர்ந்த 22 பேர் ஒரு வேனில் சுகுணா என்பவரது தலைமையில் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலைக்கு நேற்று முன்தினம் இரவு சுற்றுலா வந்து கொண்டிருந்தனர். மலைப்பகுதியில் உள்ள 70 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து அதையடுத்த சோளக்காடு பகுதியை கடந்து அங்குள்ள அரியூர் போடம்பில் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென்று வேன் கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள சாலை ஓரத்தில் இருந்த ஒரு மரத்தின் மீது மோதியது. அப்போது வேனில் இருந்தவர்கள் அலறினர். அதைக்கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் செம்மேட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

10 பேர் காயம்

அதில் பழனியம்மாள் என்பவருக்கு மட்டும் பலத்த காயம் ஏற்பட்டது. மற்ற 9 பேர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். இது குறித்து தகவல் அறிந்த கொல்லிமலை வாழவந்தி நாடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அந்த விபத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை மாவட்ட கலெக்டர் உமா, ராமலிங்கம் எம்.எல்.ஏ. ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் கூறினர்.

கொல்லிமலைக்கு சுற்றுலா வந்த வேன் மரத்தில் மோதிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்