எருது விடும் விழாவில் காளைகள் முட்டி 10 பேர் காயம்

நாட்டறம்பள்ளி அருகே எருது விடும் விழாவில் காளைகள் முட்டி 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2023-03-31 17:17 GMT

எருது விடும் விழா

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த சுண்ணாம்புகுட்டை பகுதியில் 63-ம் ஆண்டு எருது விடும் திருவிழா நேற்று நடைபெற்றது. முன்னதாக கலெக்டர் பாஸ்கரபாண்டியன் உத்தரவின் பேரில் துறை அதிகாரிகள் விழாவிற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து அனுமதி வழங்கினர். நாட்டறம்பள்ளி தாசில்தார் க.குமார் தலைமையில் விழா குழுவினர் உறுதிமொழி ஏற்றனர். காலை 7 மணிக்கு தொடங்கி மதியம் 2 மணி வரை விழா நடத்தப்பட்டது.

இதில் ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து 250 காளைகள் பங்கேற்றன. கால்நடை மருத்துவ அலுவலர்கள் காளைகளுக்கு பரிசோதனை செய்தபிறகு போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டன.

10 பேர் காயம்

குறைந்த நேரத்தில் அதிக வேகம் ஓடி இலக்கை அடைந்த காளைகளுக்கு முதல் பரிசு முதல் 53 பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவை காண பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் பங்கேற்றனர். போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகளை தடுக்க முயன்ற இளைஞர்களை காளைகள் முட்டின. இதில் லேசான காயம் அடைந்த 10 பேருக்கு அங்கிருந்து மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

இதில் நாட்டறம்பள்ளி அருகே பழையபேட்டை பச்சூர் பகுதியை சேர்ந்தவர் கோபி (வயது 25) மற்றும் திருப்பத்தூர் அருகே சோமலாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சம்பத் (55) ஆகிய இருவரையும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

பாதுகாப்பு

விழாவில் வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையில் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் என சுமார் 140 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் வருவாய் துறை, சுகாதாரத்துறை, தீயணைப்பு துறை உள்ளிட்ட துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்