உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களை 10 கி.மீ. தூரம் டோலி கட்டி தூக்கி செல்லும் அவலம்-கலெக்டரிடம் மனு

ஜமுனாமரத்தூர் எலந்தம்பட்டு கிராமத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவ வசதிக்காக டோலி கட்டி தூக்கிச்செல்லும் அவல நிலை இருப்பதால் சாலை வசதி செய்து தரக்கோரி குறைதீர்வு கூட்டத்தில் கலெக்டரிடம் கிராம மக்கள் மனு அளித்தனர்.

Update: 2023-06-19 12:23 GMT

ஜமுனாமரத்தூர் எலந்தம்பட்டு கிராமத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவ வசதிக்காக டோலி கட்டி தூக்கிச்செல்லும் அவல நிலை இருப்பதால் சாலை வசதி செய்து தரக்கோரி குறைதீர்வு கூட்டத்தில் கலெக்டரிடம் கிராம மக்கள் மனு அளித்தனர்.

மக்கள் குறைத்தீர்வு நாள் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார். இதில் கல்வி உதவித் தொகை, வங்கிக் கடனுதவி, வேலை வாய்ப்பு, முதியோர் உதவித் தொகை, வீட்டுமனைப் பட்டா, சாதிச் சான்று, விதவை உதவித் தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை மற்றும் உபகரணங்கள் உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி சுமார் 400-க்கும் மேற்பட்ட மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டது.

இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி அதன் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள கலெக்டர் உத்தரவிட்டார்.

சாலை வசதி

ஜமுனாமரத்தூர் தாலுகா எலந்தம்பட்டு கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- ஜவ்வாதுமலை ஒன்றியம் கானமலை ஊராட்சிக்கு உட்பட்ட எலந்தம்பட்டு கிராமத்தில் 185 குடும்பத்தை சேர்ந்த 850-ம் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றோம். எங்கள் கிராமத்தில் முறையாக சாலை வசதி இல்லாததால் மிகவும் சிரமப்படுகின்றோம்.

உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவ வசதிக்காக சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் டோலி கட்டி தூக்கி செல்லும் அவல நிலை உள்ளது. காலம் காலமாக கல்வி, மருத்துவம், சாலை போன்ற அடிப்படை வசதி இல்லாமல் சிரமப்பட்டு வாழ்ந்து வருகின்றோம்.

கடந்த 15-ந் தேதி சாந்தி என்பவர் வயிற்று வலியால் உடல் நல குறைவு ஏற்பட்டு டோலி கட்டி சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் தூக்கி சென்று வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தோம். உரிய நேரத்தில் செல்லாததால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து பல உயிர்களை இழந்து விட்டோம். சாலை வசதி கேட்டு பல முறை புகார் மனு அளித்தும் எங்கள் கிராமத்திற்கு சாலை அமைத்து தர வில்லை. எனவே இனி மேல் எந்த ஒரு உயிர் பலி ஏற்படாமல் இருக்க முறையான சாலை வசதி அமைத்து தர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

ஆதார் கார்டு

திருவண்ணாமலை அடுத்த மங்கலம் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது தந்தையின் பெயரில் உள்ள 2 செண்ட் நிலத்தை அருகில் நிலத்தை சேர்ந்தவர்கள் அவர்களது நிலத்துடன் சேர்த்து பத்திரம் எழுதி கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த 2 செண்ட் நிலத்தை மீட்டு தரக் கோரி விஜயகுமார் பல முறை கலெக்டர் அலுவலகம் மற்றும் பத்திர பதிவுத்துறை அலுவலகத்தில் புகார் மனு அளித்ததாக தெரிகிறது. இருப்பினும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று அவர் தான் அளித்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காததால் ஆதார்கார்டு, பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ரேசன் கார்டு ஆகியவற்றை குறைதீர்வு கூட்டத்தின் போது கலெக்டரிடம் ஒப்படைக்க வந்தார். பின்னர் அவர் கலெக்டரிடம் கோரிக்கை மனுவை அளித்து விட்டு ஆதார் கார்டு உள்ளிட்டவற்றை ஒப்படைக்க உள்ளதாக தெரிவித்தார். அதனை வாங்க மறுத்த கலெக்டர் 2 செண்ட் நிலத்தை மீட்பது குறித்து துறை சார்ந்த அலுவலர்கள் மூலம் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்