மழையால் சேதமான சாலைகளை சீரமைக்க ரூ.10 கோடி
திண்டுக்கல் நகரில் மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று மேயர் இளமதி தெரிவித்தார்.
மாநகராட்சி கூட்டம்
திண்டுக்கல் மாநகராட்சியின் அவசர கூட்டம், மாநகராட்சி கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. இதற்கு மேயர் இளமதி தலைமை தாங்கினார். துணை மேயர் ராஜப்பா முன்னிலை வகித்தார். ஆணையர் சிவசுப்பிரமணியன் வரவேற்றார். கூட்டத்தில் மாநகராட்சி கடைகளை ஏலம் விடுதல், பஸ்நிலையம் மற்றும் காந்தி மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் வாடகை செலுத்தாத கடைகளுக்கான குத்தகையை ரத்து செய்தல் உள்பட மொத்தம் 214 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு:-
தனபாலன் (பா.ஜனதா) :- பஸ்நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட 34 கடைகளை ஏலமிட்டது பற்றி வெள்ளை அறிக்கை கேட்டு இதுவரை வெளியிடவில்லை. தரவில்லை. தற்போது அதில் 29 கடைகளை மறுஏலம் விடப்படுகிறது. அந்த ஏலத்தில் முறைகேடு நடந்ததா? என விளக்க வேண்டும்.
வில்லியம்சகாயராஜ் (உதவி வருவாய் அலுவலர் பொறுப்பு) :- 29 கடைகளுக்கு முன்வைப்பு தொகை செலுத்தவில்லை. இதனால் மறுஏலமிடப்படுகிறது.
தனபாலன் (பா.ஜனதா) :- மீதமுள்ள கடைகள் திறந்து உள்ளன. எனவே 34 கடைகளையும் மறுஏலம் விடவேண்டும்.
துணை மேயர்:- புதிதாக கட்டப்பட்ட 33 கடைகளின் குத்தகையும் ரத்து செய்யப்பட்டு புதிதாக ஏலம் விடப்படும். ஒரு கடைக்கு கோர்ட்டில் உத்தரவு பெறப்பட்டுள்ளது.
குத்தகை ரத்து
தனபாலன் (பா.ஜனதா) :- வாடகை செலுத்தாத கடைகளுக்கு நோட்டீசு வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த கடைகளுக்கு வாடகை செலுத்த அவகாசம் அளிக்க வேண்டும்.
துணை மேயர்:- அனைத்து கடைகளுக்கும் 15 நாட்கள் அவகாசம் வழங்கப்படும். அதற்குள் வாடகை செலுத்தாவிட்டால் குத்தகை ரத்து செய்யப்படும்.
ஜான்பீட்டர் (தி.மு.க.) :- வாடகை செலுத்தாத 203 கடைகளின் குத்தகையை ரத்து செய்வதை ஆதரிக்கிறோம். இதேபோல் 48 வார்டுகளிலும் வாடகை செலுத்தாத வணிக வளாகங்கள், நிறுவனங்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமும் குடிநீர்
ஜோதிபாசு (மா.கம்யூ) :- மாநகராட்சி கடைகளுக்கு வாடகை செலுத்தாததால் சுமார் ரூ.4 கோடி அளவுக்கு மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் சரியான நேரத்தில் வசூலித்து இருக்க வேண்டும். மாநகராட்சி ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்படும் கடன் தொகையை கூட்டுறவு சங்கத்தில் செலுத்தவில்லை. இதனால் ஊழியர்கள் கடன் பெறமுடியவில்லை.
துணை மேயர்:- கொரோனா காலத்தில் வாடகை வசூலிக்க முடியாமல் போனது. தற்போது அனைத்து கடைகளுக்கும் அவகாசம் வழங்கப்பட்டு வாடகை வசூலிக்கப்படும். அதற்குள் வழங்காவிட்டால் குத்தகை ரத்து செய்யப்படும்.
தனபாலன் (பா.ஜனதா) :- காவிரி கூட்டு குடிநீர் 2 நாட்களுக்கு ஒருமுறை வழங்கப்படுகிறது. அதுபற்றி அதிகாரிகளிடம் கேட்டால் மாநகராட்சி பணம் செலுத்த வேண்டியது இருக்கிறது என்கின்றனர். தினமும் குடிநீர் வழங்க வேண்டும்.
துணை மேயர்:- 48 வார்டுகளிலும் மக்களுக்கு தினமும் குடிநீர் வழங்கப்படும்.
ரூ.10 கோடி ஒதுக்கீடு
கணேசன் (மா.கம்யூ):- திண்டுக்கல் நகரில் மழையால் சேதமடைந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும்.
மேயர்:- மழையால் சேதம் அடைந்த சாலைகளை சீரமைக்க அரசு ரூ.10 கோடி நிதி ஒதுக்கி இருக்கிறது. அதை கொண்டு சாலைகள் சீரமைக்கப்படும். மேலும் புதிதாக சாலைகள் அமைத்தல், வடிகால்கள் கட்டுதல் ஆகியவற்றுக்கு ரூ.36 கோடிக்கு திட்டமதிப்பீடு அனுப்பப்பட்டு இருக்கிறது. அதற்கு நிதி கிடைத்ததும் அனைத்து இடங்களிலும் சாலை அமைக்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடைபெற்றது.