தர்மபுரியில் கூட்டுறவு வார விழா: ரூ.10¼ கோடியில் நலத்திட்ட உதவிகள்-அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வழங்கினார்

Update: 2022-11-18 18:45 GMT

தர்மபுரி:

தர்மபுரியில் நடந்த கூட்டுறவு வார விழாவில் ரூ.10¼ கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வழங்கினார்.

கூட்டுறவு வார விழா

தர்மபுரி மாவட்ட கூட்டுறவு துறை சார்பில் 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா தர்மபுரியில் நடந்தது. இந்த விழாவுக்கு கலெக்டர் சாந்தி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏக்கள் ஜி.கே.மணி, வெங்கடேஸ்வரன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தடங்கம் சுப்பிரமணி, பி.பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் சந்தானம் திட்ட விளக்கவுரையாற்றினார். கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராமதாஸ் வரவேற்றார்.

விழாவில் தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியதாவது:-

தர்மபுரி மாவட்டத்தில் 520 கூட்டுறவு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பொது விநியோக திட்டத்தின் கீழ் 495 முழு நேர ரேஷன் கடைகளும், 582 பகுதி நேர ரேஷன் கடைகளும் செயல்பட்டு வருகின்றன.

பயிர் கடன்

இந்த கடைகளில் மொத்தம் 4 லட்சத்து 67 ஆயிரத்து 256 குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா அரிசி உள்ளிட்ட உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் கூட்டுறவு வங்கிகள் மூலம் 2022-2023-ம் ஆண்டில் அக்டோபர் மாதம் வரை 21 ஆயிரத்து 907 விவசாயிகளுக்கு ரூ.17.61 கோடி பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது.

91 ஆயிரத்து 759 நபர்களுக்கு ரூ.68..13 கோடி மதிப்புள்ள பல்வேறு கடன்கள் வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர் கடன்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இதனை விவசாயிகள் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும.

உபரிநீர் திட்டம்

தர்மபுரி மாவட்ட வளர்ச்சிக்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளான காவிரி உபநீர் திட்டம், சிப்காட் தொழிற்பேட்டை, ஒகேனக்கல் 2-வது கூட்டு குடிநீர் திட்டம் உள்ளிட்ட அனைத்து திட்டங்களையும் இந்த அரசு நிச்சயம் நிறைவேற்றும். இதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. இதன் மூலம் தர்மபுரி மாவட்டம் விவசாய துறையிலும், பொருளாதாரத்திலும் சிறந்து விளங்கும்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

விழாவில் சிறப்பாக செயல்படும் கூட்டுறவு சங்களுக்கு அமைச்சர் பாராட்டு கேடயம் வழங்கினார். மேலும் 1,233 பயனாளிகளுக்கு ரூ.10.29 கோடி மதிப்புள்ள பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். விழாவில் நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது, முன்னாள் எம்.எல்.ஏ. மனோகரன் மற்றும் கூட்டுறவு சங்க தலைவர்கள், சங்க செயலாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் அன்பழகன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்