கேரளாவுக்கு கடத்த முயன்ற 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்
கோவை சேரன்மாநகரில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டதுடன், ரேஷன் கடை ஊழியர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை
கோவை சேரன்மாநகரில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டதுடன், ரேஷன் கடை ஊழியர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
வாகன தணிக்கை
கோவை மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் மானிய விலையில் வழங்கப்படும் பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை கூடுதல் டி.ஜி.பி. அருண் அறிவுறுத்தலின் பேரில் கோவை மண்டல போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி உத்தரவின்படி போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அதன்படி கோவை சரக போலீஸ் துணை சூப்பிரண்டு கிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் மேனகா, சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் நேற்று கோவை சேரன்மாநகரில் உள்ள விளாங்குறிச்சி சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்
அப்போது அந்த வழியாக வந்த மினிவேனை தடுத்து நிறுத்தி அதற்குள் சோதனை செய்தனர். அப்போது அதில் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த அரிசியை சோதனை செய்தனர். அதில் மொத்தம் 30 மூடைகளில் தலா 50 கிலோ கொண்ட ரேஷன் அரிசி என்பதும், அதில் 21 மூடைகளில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் சாக்குப்பைகளில் அரிசி இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், காளப்பட்டி கரையான் பாளையத்தை சேர்ந்த பாபு என்பவர் பொதுமக்களிடம் இருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி கேரளாவுக்கு கடத்தி வருவதும் தெரியவந்தது. இதையடுத்து அந்த ஆம்னி வேன், அதற்குள் இருந்த 1½ டன் ரேஷன் அரிசி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
2 பேர் கைது
இதையடுத்து அந்த வேனைஓட்டி வந்த டிரைவர் சபரிராஜன் மற்றும் இந்த கடத்தலுக்கு உடந்தையாக இருந்த காளப்பட்டியில் உள்ள நகர கூட்டுறவு கடன் சங்க ரேஷன் கடை ஊழியர் கோபாலன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த கடத்தலுக்கு முக்கிய காரணமாக இருந்த பாபு என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.