காஞ்சீபுரம் அருகே வீட்டில் பதுக்கிய 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் 3 பேர் கைது

காஞ்சீபுரம் அருகே வீட்டில் பதுக்கிய 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் 3 பேர் கைது.

Update: 2023-05-20 20:53 GMT

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் அருகே ஒலிமுகமதுபேட்டை ஹாஜி நகர் பகுதியில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக காஞ்சீபுரம் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுப் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், குடிமைப்பொருள் மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை ஏ.டி.எஸ்.பி.அருண், கண்காணிப்பாளர் கீதா, துணை கண்காணிப்பாளர் நாகராஜன் ஆகியோர் ரேஷன் அரிசி கடத்தலை தீவிரமாக கண்காணிக்க உத்தரவிட்டனர்.

அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையில் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஒலிமுகமதுபேட்டை அருகே ஹாஜி நகர் பகுதியில் உள்ள பிலால் என்பவரது வீட்டிற்கு சென்றனர். வீட்டில் உள்ள அறைகளில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது 50 கிலோ கொண்ட 30 மூட்டைகளில் சுமார் 1,500 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சுற்றுவட்டார கிராம பகுதிகளில் இருந்து பொதுமக்களிடம் இருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி மொத்தமாக, வெளிமாநிலங்களுக்கு கடத்த வைத்திருப்பது தெரியவந்தது. எனவே, ஒலிமுகமதுபேட்டையை சேர்ந்த பிலால் (வயது 37), இடைதரகர்களாக செயல்பட்ட அதே பகுதியை சேர்ந்த மொய்தீன் அப்துல் காதர் (52), திருக்காலிமேட்டை சேர்ந்த நாராயணமூர்த்தி (35) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அங்கு பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்