போதை பொருள் கடத்தல், விற்பனையை தடுக்க மதுரை, திண்டுக்கல் போதை கடத்தல் தடுப்பு பிரிவு சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படையை சேர்ந்த போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் திண்டுக்கல்-மதுரை 4 வழிச்சாலையில் மதுரையை சேர்ந்த தனிப்படை போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது பிள்ளையார்நத்தம் பிரிவு அருகே வேடப்பட்டிக்கு செல்லும் சாலையில் வேகமாக வந்த ஒரு சரக்கு வேனை நிறுத்தும்படி போலீசார் சைகை செய்தனர். ஆனால் அந்த வேன் நிற்காமல் சென்றது. இதையடுத்து தனிப்படை போலீசார் அந்த வேனை, தங்களின் வாகனங்கள் மூலம் விரட்டி பிடித்து நிறுத்தினர். பின்னர் அந்த வேனில் போலீசார் சோதனையிட்ட போது, 63 மூட்டைகளில் அரசால் தடை செய்யப்பட்ட 1,300 கிலோ புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது.
பின்னர் சரக்கு வேனில் வந்தவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் திருவண்ணாமலையை சேர்ந்த டிரைவர் மதியழகன் (வயது 32), திண்டுக்கல் வேடப்பட்டியை சேர்ந்த அப்பாஸ் (28) என்பதும், திண்டுக்கல் பகுதியில் உள்ள கடைகளில் விற்பனை செய்வதற்காக பெங்களூருவில் இருந்து புகையிலை பொருட்களை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து சரக்கு வேன், புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் அம்பாத்துரை போலீசில் அவற்றை ஒப்படைத்தனர். மேலும் பிடிபட்ட 2 பேர் மீதும் அம்பாத்துரை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.