வேனில் கடத்திய 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
திண்டுக்கல் அருகே வேனில் கடத்திய 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதில் டிரைவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திண்டுக்கல் பகுதியில் குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இடையக்கோட்டை- திண்டுக்கல் சாலையில் வளையபட்டி பகுதியில் வந்த வேனை நிறுத்தினர். இதற்கிடையே போலீசாரை கண்டதும் வேனில் வந்தவர்கள் சாலையோரத்தில் வேனை நிறுத்திவிட்டு தப்பியோட முயன்றனர்.
ஆனாலும் அவர்களை போலீசார் விரட்டி பிடித்தனர். அதைத்தொடர்ந்து வேனில் போலீசார் சோதனை நடத்தினர். அதில் மூட்டை, மூட்டையாக 1 டன் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து வேன், ரேஷன் அரிசி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், பிடிபட்ட இருவரும் திண்டுக்கல்லை அடுத்த குள்ளனம்பட்டி வினோபாஜிநகரை சேர்ந்த டிரைவர் கருப்பையா (வயது 31), கனகராஜ் (30) என்பதும், இடையக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ரேஷன் அரிசியை சேகரித்து வெளிமாநிலத்திற்கு கடத்திச் சென்று கொண்டிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.