விசைப்படகில் சிக்கிய 1 டன் ராட்சத திருக்கை மீன்

குளச்சலில் விசைப்படகில் சிக்கிய 1 டன் எடை கொண்ட ராட்சத திருக்கை மீன் ரூ.61 ஆயிரத்துக்கு விற்பனையானது.

Update: 2023-01-03 18:45 GMT

குளச்சல்:

குளச்சலில் விசைப்படகில் சிக்கிய 1 டன் எடை கொண்ட ராட்சத திருக்கை மீன் ரூ.61 ஆயிரத்துக்கு விற்பனையானது.

ஆழ்கடல் மீன்பிடிப்பு

குளச்சல் மீன்பிடி துறைமுகத்தை தங்கு தளமாக கொண்டு 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 1000-க்கும் மேற்பட்ட வள்ளங்களும் மீன்பிடி தொழில் செய்து வருகின்றன. விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதி வரை சென்று 10 நாட்கள் வரை தங்கி மீன்பிடித்து விட்டு கரைக்கு திரும்புவது வழக்கம். அவ்வாறு செல்லும் விசைப்படகுகளில் சுறா, கேரை, இறால், புல்லன், கணவாய் போன்ற உயர்ரக மீன்கள் கிடைக்கும். வள்ளங்கள் காலையில் சென்று விட்டு அருகில் மீன்பிடித்து மதியம் கரைக்கு திரும்புகின்றன. இவற்றில் நெத்திலி, சாளை போன்ற சிறிய ரக மீன்கள் கிடைக்கும்.

ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்ற விசைப்படகுகள் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கரை திரும்பின. விசைப்படகு மீனவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடிவிட்டு, மறுநாள் சுனாமி நினைவு தின நிகழ்ச்சி மற்றும் புத்தாண்டு ஆலய வழிபாடுகளிலும் கலந்து கொண்டனர். இதையடுத்து அவர்கள் நேற்று முன்தினம் முதல் மீண்டும் ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்றனர்.

ராட்சத திருக்கை மீன்

ஒரு சில விசைப்படகுகள் சுனாமி நினைவு தினம் முடிந்ததும் மீன்பிடிக்கச் சென்றன. இதில் ஒரு விசைப்படகு மட்டும் நேற்று காலையில் கரைக்கு திரும்பியது. இந்த விசைப்படகில் திரட்சி எனப்படும் ராட்சத திருக்கை மீன் சிக்கி இருந்தது. ஒரு டன் எடை கொண்ட அந்த மீனை முழுமையாக கரையில் உள்ள ஏலக்கூடத்திற்கு கொண்டுவர முடியவில்லை.

இதையடுத்து மீனவர்கள் அந்த மீனை 8 துண்டுகளாக வெட்டி ஏலக்கூடத்துக்கு கொண்டு வந்தனர். ஏலக்கூடத்தில் வைத்து அந்த மீன் ஏலமிடப்பட்டது. ஏலத்தின் முடிவில் அந்த மீன் ரூ.61 ஆயிரத்திற்கு விற்பனையானது. இந்த வகை மீன்களின் உறுப்புகளிலிருந்து மருந்து பொருட்கள் தயாரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Tags:    

மேலும் செய்திகள்