சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணி தவறவிட்ட 1½ பவுன் கைச்செயின்
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணி தவறவிட்ட 1½ பவுன் கைச்செயின்
சென்னையில் இருந்து தஞ்சைக்கு வந்த சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணி தவறவிட்ட 1½ பவுன் கைச்செயினை போலீசார் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர்.
தவறவிட்ட கைச்செயின்
தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை ரெயில்நகரை சேர்ந்தவர் ராகேஷ் (வயது 34). இவர் சம்பவத்தன்று சென்னையில் இருந்து சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் குளிர்சான வசதியுடன் கூடிய பெட்டியில் தஞ்சைக்கு வந்தார். தஞ்சை ரெயில் நிலையத்தில் ரெயில் நின்றவுடன் ராகேஷ் தனது உடமைகளை எடுத்து கொண்டு கீழே இறங்கினார். அவர் வீட்டிற்கு சென்றபிறகு கையில் அணிந்திருந்த 1½ பவுன் கைச்செயினை காணாது அதிர்ச்சி அடைந்தார். பல இடங்களில் தேடி பார்த்தும் செயின் கிடைக்கவில்லை. கையில் இருந்து கழன்ற செயின் ரெயில் பெட்டியில் தான் விழுந்து இருக்கலாம் என கருதிய அவர், இது குறித்து தஞ்சை ரெயில்வே போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் கைச்செயினை தஞ்சை பெண் பயணி ஒருவர் ரெயில் பெட்டியில் கண்டெடுத்து அதனை உரியவரிடம் ஒப்படைக்குமாறு தனது சகோதரனிடம் கூறினார்.
ஒப்படைப்பு
அதைத்தொடர்ந்து அவர், கைச்செயினை புகைப்படம் எடுத்து அனைத்து வாட்ஸ்அப் குரூப்பிலும் பதிவிட்டதுடன், கைச்செயினை தவறவிட்ட நபர் தன்னை தொடர்பு கொண்டு பெற்று கொள்ளலாம் எனவும் குறிப்பிட்டிருந்தார். இதை அறிந்த ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவவடிவேல், சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் மற்றும் போலீசார் அந்த நபரிடம் இருந்து கைச்செயினை மீட்டு தவறவிட்ட ராகேசிடம் ஒப்படைத்தனர்.