மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1¼ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

திருவாரூரில மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1¼ லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வழங்கினார்.

Update: 2023-01-04 18:45 GMT

திருவாரூரில மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1¼ லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வழங்கினார்.

சிறப்பு முகாம்

திருவாரூர் ஒன்றியம் புலிவலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த சிறப்பு முகாம் நேற்று நடந்தது. முகாமிற்கு கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை தாங்கி தொடங்கி வைத்து, 9 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 21 ஆயிரத்து 941 மதிப்பிலான இலவச செல்போன்களும், 2 பேருக்கு ரூ.5 ஆயிரத்து 560 மதிப்பிலான காதொலி கருவியினையும் வழங்கினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. 21 வகையான மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது.

பராமரிப்பு உதவி தொகை

மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் மாதம் தலா ரூ.1500 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.சுயதொழில் புரிந்து பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்வதற்கு வங்கி கடன் மானியமும், 18 வயதிற்கு மேற்பட்ட பார்வைதிறன் மற்றும் செவித்திறன் குறைவுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்மார்ட் செல்போன் வழங்கும் திட்டமும், மோட்டார் பொருத்தப்பட்ட தையல் எந்திரங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மருத்துவ சான்றிதழ்

இந்த சிறப்பு முகாமில் உபகரணங்கள் வழங்கிட 79 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சிறப்பு டாக்டர்கள் கலந்து கொண்டு 79 மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்றிதழ்களையும் வழங்கினர். இந்த முகாமில் 202 பேர் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை அளித்துள்ளனர்.

முகாமில் துணை இயக்குனர் (சுகாதாரம்) ஹேமசந்த் காந்தி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயா, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் புவனா, தாசில்தார் நக்கீரன், ஒன்றியக்குழுத்தலைவர் தேவா, திருவாரூர் நகர்மன்றத்தலைவர் புவனபிரியா செந்தில், ஊராட்சி மன்ற தலைவர் காளிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்