கடந்த 8 நாட்களில் 1 லட்சம் பார்வையாளர்கள் திரண்டனர்; வண்டலூர் பூங்காவில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது

புத்தாண்டையொட்டி, வண்டலூர் பூங்காவில் நேற்று பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. கடந்த 8 நாட்களில் 1 லட்சம் பார்வையாளர்கள் திரண்டதாக பூங்கா நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2023-01-01 10:02 GMT

வண்டலூர் உயிரியல் பூங்கா

சென்னை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இயற்கையோடு அமைந்துள்ள இப் பூங்காவிற்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் வருகை தந்து பூங்காவில் உள்ள விலங்குகளை பார்த்து ரசித்து செல்வது வழக்கம், இந்த நிலையில் கடந்த மாதம் 24-ந் தேதி முதல் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை விடப்பட்ட நிலையில், கடந்த 8 நாட்களில் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு சென்னை மற்றும் சென்னை புறநகர் ஒட்டி உள்ள காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்பட பல்வேறு மாவட்டங்களில் சேர்ந்த ஏராளமான பள்ளி மாணவர்கள், பொதுமக்கள், தங்களது குடும்பத்துடன் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு வருகை தந்து பூங்காவில் விலங்குகளை சுற்றிப்பார்த்து மகிழ்ந்தனர்.

கூட்டம் அலைமோதியது

இந்த நிலையில் நேற்று ஆண்டின் கடைசி தினத்தை முன்னிட்டு பல்வேறு ஊர்களில் இருந்து நேற்று காலை முதல் கூட்டம் கூட்டமாக வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு பொதுமக்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். இதனால் பூங்காவில் எங்கு பார்த்தாலும் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக வண்டலூர் பூங்காவில் பராமரிக்கப்பட்ட வரும் மனித குரங்குகள், யானைகள், வெள்ளை புலிகள், ஆகிய விலங்குகள் அடைக்கப்பட்ட இடங்களில் பொதுமக்கள் நீண்ட நேரம் நின்று மனித குரங்குகள், யானைகள் செய்யும் சேட்டைகளையும், வெள்ளை புலி, வங்கப்புலி, சிறுத்தை, மற்றும் பறவைகள் ஆகியவற்றை குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை பார்த்து ரசித்தனர்.

பொதுமக்களுக்கு ஏற்பாடுகள்

பூங்காவில் தினந்தோறும் கூட்டம் அதிகரித்து வந்ததால் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் பூங்கா நிர்வாகம் செய்து இருந்தனர். இதுகுறித்து பூங்கா அதிகாரி ஒருவர் கூறுகையில்:- அரையாண்டு விடுமுறை முன்னிட்டு கடந்த 8 தினங்களில் 1 லட்சம் பார்வையாளர்கள் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு வருகை தந்துள்ளனர். புத்தாண்டையொட்டி, நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் 16 ஆயிரம் பார்வையாளர்கள் திரண்டு வந்துள்ளனர். பூங்காவிற்கு வரும் பொதுமக்களிடம் கொரோனா வழிகாட்டி நெறிமுறைகளை கடைப்பிடிக்கும்படி ஊழியர்கள் கேட்டுக் கொண்டனர். இன்று ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பூங்காவிற்கு பொதுமக்கள் அதிகளவில் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம், இதனால் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் பூங்கா நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்