ஒரே கட்டிடத்தில் 2 கடைகளில் ரூ.1¾ லட்சம் திருட்டு
பெரம்பலூரில் ஒரே கட்டிடத்தில் 2 கடைகளில் ரூ.1¾ லட்சம் திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
சூப்பர் மார்க்கெட்
திருச்சி லால்குடியை சேர்ந்த சந்திரசேகர் மனைவி ரேவதி (வயது 37). இவர் பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகே சூப்பர் மார்க்கெட் கடையை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இவரது கடையின் பக்கவாட்டில் உள்ள ஜன்னல் கம்பியை மர்ம ஆசாமிகள் உடைத்து உள்ளே நுழைந்து ரூ.1¾ லட்சத்தை திருடி சென்றனர். மேலும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியது வெளியே தெரிந்துவிடாமல் இருப்பதற்காக டி.வி.ஆர். கருவியையும் எடுத்துச்சென்றனர்.
இதேபோல் பெரம்பலூர் ரோஸ் நகரில் வசித்துவரும் சவுந்தர்ராஜன் என்பவர் இதே கட்டிடத்தில் குழந்தைகளுக்கான பொருட்களை விற்பனை செய்யும் கடையை நடத்தி வருகிறார். இவரது கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம ஆசாமிகள் கல்லாபெட்டியில் இருந்த ரூ.5 ஆயிரத்தை திருடி சென்றனர்.
மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர். மேலும் போலீஸ் மோப்பநாய் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டது. அந்த நாய் சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.
பெரம்பலூர் நகரில் தினமும் வீடுகள் மற்றும் கடைகளை குறிவைத்து ஒரு கும்பல் போலீசாருக்கு சவால்விடும் வகையில் திருட்டு சம்பவங்களை அரங்கேற்றி வருகிறது. எனவே பெரம்பலூரில் சிறப்பு போலீசாரை நியமித்து திருட்டு சம்பவங்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், ஏற்கனவே திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களில் துப்புதுலக்கி, தொடர்ந்து கைவரிசை காட்டிவரும் மர்ம கும்பலை கைது செய்து திருட்டுப்போன பொருட்களையும் மீட்க வேண்டும் என்று வியாபாரிகள் மாவட்ட போலீஸ் அதிகாரிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.