1 லட்சம் சேமிப்பு கணக்குகள் தொடக்கம்
நடப்பு நிதி ஆண்டில் தபால் துறையில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட சேமிப்பு கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாக தபால் துறை மத்திய மண்டல இயக்குனர் ரவீந்திரன் கூறினார்.
இந்திய தபால்துறை கடலூர் கோட்டத்தின் சார்பில் அனைத்து மக்களுக்கும் தபால் சிறு சேமிப்பு சேவை சென்றடையும் வகையில் கிராமங்களிலும் சிறப்பு முகாம் அமைத்து, தபால் சேமிப்பு கணக்குகள் தொடங்கப்பட்டு வருகின்றன. அதன்படி கடலூரில் நேற்று தபால் சிறு சேமிப்பு சிறப்பு முகாம் நடந்தது.
முகாமுக்கு கடலூர் கோட்ட தபால் அலுவலகங்களின் கண்காணிப்பாளர் கணேஷ் தலைமை தாங்கினார். துணை கண்காணிப்பாளர்கள் மணிவேல், ஆறுமுகம் முன்னிலை வகித்தனர். கடலூர் தலைமை தபால் தலைவர் தண்டபாணி வரவேற்றார். முகாமில் சிறப்பு அழைப்பாளராக தபால் துறை மத்திய மண்டல இயக்குனர் ரவீந்திரன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
சேமிப்பு கணக்குகள்
சிறு சேமிப்பை ஊக்கப்படுத்தும் வகையில் இந்திய தபால் துறை பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக பெண் குழந்தைகளை பேணி பாதுகாப்பதற்காக செல்வமகள் சேமிப்பு திட்டம் தொடங்கி சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக மத்திய மண்டலத்தில் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட சேமிப்பு கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளது. இதில் கடலூர் கோட்டத்தில் நடப்பு நிதி ஆண்டில் மட்டும் 11,974 செல்வமகள் சேமிப்பு கணக்குகள் உள்ளிட்ட 1 லட்சத்திற்கும் மேற்பட்ட சேமிப்பு கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.
75-வது சுதந்திர தின அமுது பெருவிழாவையொட்டி இந்தியா முழுவதும் 7½லட்சம் செல்வ மகள் சேமிப்பு கணக்கு தொடங்கப்படுகிறது. இதன்படி மத்திய மண்டலத்திற்குட்பட்ட கடலூர் கோட்டத்திலும் நாளை (வியாழக்கிழமை), நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) ஆகிய 2 நாட்கள் செல்வ மகள் சேமிப்பு திட்ட கணக்கு தொடங்கும் சிறப்பு முகாம் 2 தலைமை தபால் நிலையம் உள்பட 360 தபால் நிலையங்களில் நடக்கிறது. இதில் ஒவ்வொரு அலுவலகமும் குறைந்தது 5 கணக்குகள் தொடங்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதற்கான நடைமுறை செய்யப்பட்டு வருகிறது.
காப்பீடு திட்டம்
இது மட்டுமின்றி 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கான சிறு சேமிப்பு திட்டத்தையும் பல தரப்பட்ட மக்களிடம் கொண்டு செல்வதற்காக சிறப்பு முகாம்களை ஏற்படுத்தி, அந்த கணக்குகளும் தொடங்கப்பட்டு வருகின்றன. தனிநபர் காப்பீடு, ரூ.50 லட்சம் வரை காப்பீடு செய்யும் திட்டமும் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து கிராமங்களில் தபால் சேமிப்பு கணக்குகளை பொதுமக்களை தொடங்க வைத்த தபால் ஊழியர்களுக்கு நினைவு பரிசு வழங்கி பாராட்டினார். இதில் தபால் ஆய்வாளர்கள் ஸ்டாலின், வடிவேல், பழனிமுத்து, குமாரவடிவேல் மற்றும் துணை தபால் தலைவர்கள், தபால்காரர்கள், கிராமிய அஞ்சலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.