விதிமுறைகளை மீறியதாக 1 லட்சத்து 95 ஆயிரத்து 925 பேர் மீது வழக்கு

விதிமுறைகளை மீறியதாக 1 லட்சத்து 95 ஆயிரத்து 925 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-06-29 18:28 GMT

கரூர், 

விழிப்புணர்வு

கரூர் மாவட்டத்தில் உள்ள அந்தந்த போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் அவ்வப்போது வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது அதிவேகமாக வாகனத்தை ஓட்டுதல், ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் பயணிப்பதால் ஏற்படும் விளைவுகள் குறித்து வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இருப்பினும், வாகன ஓட்டிகளுக்கு பலர் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாமல் பயணித்து வருகின்றனர். இந்நிலையில் போலீசார் அவ்வப்போது வாகன சோதனையில் ஈடுபட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல், அதிவேகமாக வாகனத்தை ஓட்டுதல், முகப்பு விளக்கு இன்றி வாகனம் ஓட்டுதல், செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டுதல், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

1,95,925 பேர் மீது வழக்கு

அந்த வகையில் கடந்த ஜனவரி மாதம் 1-ந்தேதி முதல் ஜூன் 27-ந்தேதி வரை கரூர் மாவட்டம் முழுவதும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக 450 பேர் மீதும், அதிவேகமாக வாகனத்தை ஓட்டியதற்காக 2 ஆயிரத்து 371 பேர் மீதும், கனரக வாகனங்களில் அதிக பாரம் ஏற்றி சென்றதாக 145 பேர் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது.மேலும் செல்போன் பேசியபடி வாகனத்தை ஓட்டி சென்றதற்காக 14 ஆயிரத்து 563 பேர் மீதும், ஹெல்மெட் அணியாமல் வாகனத்தை ஓட்டியதற்காக 1 லட்சத்து 42 ஆயிரத்து 854 பேர் மீதும், சீட் பெல்டு அணியாமல் சென்றதற்காக 15 ஆயிரத்து 323 பேர் மீதும், வாகனத்தில் 3 பேர் அமர்ந்து சென்றதற்காக 2 ஆயிரத்து 660 பேர் மீதும், லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட பல்வேறு இதர வழக்குகள் என மொத்தம் கரூர் மாவட்டத்தில் வாகன விதிமுறைகளை மீறியதாக 1 லட்சத்து 95 ஆயிரத்து 925 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. மேற்கண்ட தகவலை உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்