ஏற்காட்டில் கோடை விழா: மலர் கண்காட்சியை 1 லட்சத்து 33 ஆயிரம் பேர் கண்டு ரசித்தனர் நிறைவு விழாவில் கலெக்டர் கார்மேகம் தகவல்

ஏற்காட்டில் கோடை விழா மலர் கண்காட்சியை 1 லட்சத்து 33 ஆயிரம் பேர் கண்டு ரசித்தனர் என்று கோடை விழா நிறைவு விழாவில் கலெக்டர் கார்மேகம் தெரிவித்தார்.

Update: 2022-06-01 20:53 GMT

ஏற்காடு,

கோடை விழா

ஏற்காட்டில் 45-வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி கடந்த 25-ந் தேதி தொடங்கி நடைபெற்றது. இதன் நிறைவு விழா ஏற்காட்டில் உள்ள கலையரங்கத்தில் நேற்று நடந்தது.

விழாவிற்கு மாவட்ட கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

ஏற்காட்டில் இந்த ஆண்டு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி 8 நாட்கள் சிறப்பாக நடத்தப்பட்டு இன்றுடன் (நேற்று) நிறைவு பெறுகிறது. இந்த கோடைவிழாவில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் கலையரங்கம் மற்றும் திறந்தவெளி அரங்குகளில் பல்வேறு வகையான கலைநிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.

இந்த கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள ரோஜா பூங்கா, அரசு தாவரவியல் பூங்காக்கள், மரபியல் பூங்கா, அண்ணா பூங்கா, ஏரிப்பூங்காக்கள் உள்ளிட்ட இடங்களை 8 நாட்களில் 1 லட்சத்து 33 ஆயிரத்து 300 சுற்றுலாப்பயணிகள் வருகை தந்து பார்வையிட்டுள்ளனர். மேலும் நாள்தோறும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு கோடை விழா களை கட்டியது.

வானியல் தொலைநோக்கி

ஏற்காட்டை சர்வதேச தரத்தில் முன்னேற்றுவதற்காக 'நம்முடைய கனவு ஏற்காடு திட்டம்' என்ற ஒரு உன்னதமான திட்டம் உள்ளது. இத்திட்டத்தில் ஏற்காட்டின் மிக உயரிய இடமான சேர்வராயன் கோவிலில் வானியல் தொலைநோக்கி மூலம் வானத்தை கண்டுகளிக்க ஏற்பாடு மற்றும் மினி திரையரங்கம் அமைத்தல் உள்ளிட்டவைகள் இடம்பெற்றுள்ளன.

கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியை சிறப்பாக ஏற்பாடு செய்து ஒருங்கிணைந்து பணியாற்றிய ஊரக வளர்ச்சித்துறை மற்றும் வருவாய்த்துறையினர் உள்ளிட்ட அனைத்துத்துறை அரசு அலுவலர்களுக்கும், தூய்மை பணியாளர்கள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் உள்ளிட்ட ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு மாவட்ட கலெக்டர் கார்மேகம் பேசினார்.

பரிசு, பாராட்டு சான்றிதழ்

இதைத்தொடர்ந்து, புகைப்பட போட்டி, இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கான கைப்பந்து போட்டி, கால்பந்து, கபடி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் நினைவுப்பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார். மேலும் கொழு கொழு குழந்தை போட்டிகள், சமையல் போட்டிகள் உள்ளிட்ட குழந்தைகள் மற்றும் பெண்களுக்காக நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும், வேளாண்மை - உழவர் நலத்துறை மற்றும் தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறையின் சார்பில் வீட்டுத் தோட்டம், மாடித் தோட்டம், காய்கறி வடிவமைப்பு உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் நினைவு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை அவர் வழங்கினார்.

விழாவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வம், வருவாய் கோட்டாட்சியர்கள் விஷ்ணுவர்த்தினி, சரண்யா, தோட்டக்கலைத் துறை துணை இயக்குனர் (பொறுப்பு) கணேசன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ஜெமினி, மாவட்ட சுற்றுலா அலுவலர் ஜனார்த்தனன், ஏற்காடு வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன் உள்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

ஏற்காட்டில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி கடந்த 25-ந் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் தோட்டக்கலைத்துறையின் மூலம் லட்சக்கணக்கான அரிய மலர்களை கொண்டு ஏற்காடு அண்ணா பூங்காவில் மகளிருக்கான இலவச பேருந்து பயணதிட்டம், மஞ்சப்பை, மேட்டூர் அணை, மாட்டு வண்டி, வள்ளுவர் கோட்டம், பட்டாம்பூச்சி, சின் சான் ஆகிய வடிவங்கள் வடிவமைக்கப்பட்டு சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவர்ந்தன. இந்த மலர் கண்காட்சியை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கும் வகையில் வருகிற 5-ந் தேதி வரை மலர் கண்காட்சி நடைபெறும என்று தோட்டக்கலை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்