முதல்-அமைச்சருக்கு 23 இடங்களில் 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் வரவேற்பு-அமைச்சர் வி.செந்தில்பாலாஜி பேட்டி
கரூர் மாவட்டத்திற்கு வருகை தரும் முதல்-அமைச்சருக்கு 23 இடங்களில் 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கூறினார்.
நலத்திட்ட உதவிகள்
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கரூர் வருகையையொட்டி திருமாநிலையூர் மைதானத்தில் முன்னேற்பாடு பணிகள் குறித்து மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் ஆகியோர் உடனிருந்தனர். பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 1-ந்தேதி மாலை கரூர் மாவட்டத்திற்கு வருகைதர உள்ளார். 2-ந்தேதி காலை அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி, சிறப்புரையாற்ற உள்ளார். இதையொட்டி 1-ந்தேதி மாலை முதல்-அமைச்சருக்கு குளித்தலை, கிருஷ்ணராயபுரம், மாயனூர், வெங்கக்கல்பட்டி ஆகிய 4 இடங்களில் உற்சாக வரவேற்பு வழங்கப்படுகின்றன. அன்று மாலை பயணியர் மாளிகையில் கரூர் மாவட்டத்திற்குட்பட்ட தொழில் முனைவோர் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகளிடம் கோரிக்கை மனுக்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்றுக்கொள்கிறார்.
ஆய்வு கூட்டம்
2-ந்தேதி காலை 9 மணிக்கு பயணியர் மாளிகையில் இருந்து அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கக்கூடிய திருமாநிலையூர் வரை 23 இடங்களில் 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் முதல்-அமைச்சருக்கு வரவேற்பு கொடுப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை இல்லாத அளவிற்கு கரூர் மாவட்டத்தில் 76 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகள் ஒரே நாளில், ஒரே அரங்கத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்குவது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாகும். இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி, அனைத்து துறை அலுவலர்களுடனான முன்னேற்பாட்டு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் அமைச்சர் தலைமையில் நடைபெற்றது.
100 சதவீதம் நிறைவேற்ற முயற்சி
முன்னதாக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கரூர் மாவட்டத்திற்கு வருகைபுரிவதையொட்டி, கரூரில் தொழில் நிறுவனங்கள் சார்பில் எடுத்துரைக்க வேண்டிய கோரிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கோரிக்கை மனுக்களை பெற்று, பேசுகையில், வர்த்தக சங்க கூட்டமைப்புகள் தனித்தனியாக கோரிக்கை மனுக்கள் கொடுக்காமல், அதற்குரிய தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் சார்பாக தலைவர்கள், பொருளாளர், செயலாளர் மற்றும் பிரதிநிதிகள் சார்பில் குழுவாக சென்று மனுக்களை கொடுக்க வேண்டும். அதற்குரிய ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. மேலும் இந்த கோரிக்கைகள் அனைத்தும் முதல்-அமைச்சர் கவனத்திற்கு எடுத்து சென்று 100 சதவீதம் நிறைவேற்றுவதற்கு முயற்சி மேற்கொள்ளப்படும், என்றார்.கூட்டத்தில் கரூர் ஜவுளி உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்க கவுரவ தலைவர் அட்லஸ் நாச்சிமுத்து, தலைவர் கோபாலகிருஷ்ணன், கரூர் வீவிங் மற்றும் நெட்டிங் பேக்டரி உரிமையாளர் சங்க தலைவர் தனபதி, ஜவுளி ஏற்றுமதியாளர்கள் சங்க நிர்வாகி ஸ்டீபன் பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆலோசனை கூட்டம்
முன்னதாக கரூர் மாவட்ட தி.மு.க. சார்பில் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளுக்கான ஆலோசனை கூட்டம் கரூர்-கோவை சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு குளித்தலை எம்.எல்.ஏ. மாணிக்கம் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக கரூர் மாவட்ட பொறுப்பாளரும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 2-ந்தேதி 76 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். கரூர் மாவட்டத்தில் விடுபட்ட பயனாளிகள் யாரேனும் இருந்தால் நாளை (அதாவது இன்று) மாலைக்குள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்கலாம்.
திராவிட மாடல் ஆட்சி
வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் என்ற பாகுபாடு பார்க்காமல் அனைவருக்குமான மக்கள் பிரதிநிதியாக நாம் பணியாற்றிட வேண்டும். முதல்-அமைச்சரின் இலக்கு எல்லோருக்கும் எல்லாம் என்ற உன்னத நோக்கத்தோடு தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வருகிறார்.
தமிழகம் இந்தியாவில் முதலிடம் என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு தமிழகத்தில் பொற்கால ஆட்சியை வழங்கி வருகிறார். முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்கான பணிகளை நாம் முன்னெடுத்து செய்திட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. சிவகாமசுந்தரி, மேயர் கவிதா கணேசன், துணைமேயர் தாரணி சரவணன், மாநகர பொறுப்பாளர்கள் கணேசன், எஸ்.பி.கனகராஜ், அன்பரசன், கோல்டுஸ்பாட் ராஜா, சுப்பிரமணியன், கரூர் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் சேகர் என்கிற குணசேகரன், க.பரமத்தி வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் நெடுங்கூர் கார்த்தி, அரவக்குறிச்சி மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் எம்.எஸ்.மணியன், அரவக்குறிச்சி கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் மணிகண்டன், கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய செயலாளா் ரவிராஜா, வர்த்தக அணி துணை செயலாளர் வே.பல்லவிராஜா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.